உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம் - ரூல்கர்வ் நடைமுறையால் 3801 மில்லியன் கன அடி நீர் வீண்

பெரியாறு அணையில் இருந்து கேரளாவுக்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தம் - ரூல்கர்வ் நடைமுறையால் 3801 மில்லியன் கன அடி நீர் வீண்

கூடலுார்: முல்லைப் பெரியாறு அணையில் இருந்து கடந்த 9 நாட்களாக கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. ரூல்கர்வ் நடைமுறையால் 9 நாட்களில் 3801 மில்லியன் கன அடி நீர் தமிழகப் பகுதிக்கு பயன்படுத்த முடியாமல் வீணாகியுள்ளது. முல்லைப் பெரியாறு அணை நீர்ப் பிடிப்பில் பெய்த கனமழையால் அக்.,18ல் நீர்மட்டம் வெகுவாக உயர்ந்து 138 அடியை கடந்தது. அணையில் நீர்மட்டம் 142 அடி தேக்க உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு இருந்தும் ரூல்கர்வ் (நீர் தேக்க கால அட்டவணை) நடைமுறையால் தண்ணீரைத் தேக்க முடியாமல் கேரள பகுதிக்கு வீணாக வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதனால் அக்.,18ல் 13 ஷட்டர்கள் திறக்கப்பட்டு 7163 கன அடி நீர் கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. அதன் பின் அக்.,19ல் 10,178 கன அடி, அக்.,20ல் 7567 கன அடி, அக்.,21ல் 6003 கன அடி, அக்.,22ல் 4368 கன அடி, அக்.,23ல் 3033 கனஅடி, அக்.,24ல் 1526 கன அடி, அக்.,25ல் 1780 கன அடி, அக்., 26ல் 2123 கன அடி கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டது. இந்நிலையில் மழை குறைவால் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து நேற்று காலை கேரள பகுதிக்கு வெளியேற்றப்பட்டு வந்த தண்ணீர் நிறுத்தப்பட்டது. நேற்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 137.80 அடியாக இருந்தது. (மொத்த உயரம் 152 அடி). நீர்ப்பிடிப்பில் மழை பதிவாகவில்லை. தமிழகப் பகுதிக்கு 1822 கன அடி திறக்கப்பட்டுள்ளது. நீர் இருப்பு 6571 மில்லியன் கன அடியாகும். கேரளாவுக்கு வீணாகச் சென்ற 3801 மில்லியன் கன அடி நீர்: சுதந்திர அமல்ராஜ், ஓய்வு பெற்ற பெரியாறு அணை செயற்பொறியாளர்: ரூல்கர்வ் நடைமுறையால் உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்திற்கு உரிமை உள்ள தண்ணீர் கடந்த 9 நாட்களாக கேரளாவுக்கு வீணாக வெளியேறி உள்ளது. இந்தத் தண்ணீர் தமிழகத்திற்கு பயன்படுத்தியிருந்தால் ஒரு போக நெல் சாகுபடிக்கு போதுமானதாக இருந்திருக்கும். ரூல்கர்வ் நடைமுறை என்பது அனைத்து அணைகளிலும் உள்ளது. ஆனால் பெரியாறு அணையை பொறுத்தவரை முழு கொள்ளளவான 152 அடி நீரை வைத்து நிர்ணயம் செய்திருக்க வேண்டும். இதை முன்கூட்டியே பரிசீலனை செய்யும் வகையில் எதிர்ப்புகளை காட்டியிருக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை