மேலும் செய்திகள்
குமுளியில் மாசுக் கட்டுப்பாட்டு விஞ்ஞானி ஆய்வு
21-Jan-2025
கூடலுார் : தமிழக கேரள எல்லையான குமுளியில் கடத்தலை முழுமையாக தடுக்க அனைத்து துறையைச் சேர்ந்த ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைவது எப்போது என்ற எதிர்பார்ப்பில் மக்கள் உள்ளனர்.தமிழக கேரளாவை இணைக்கும் முக்கிய வழித்தடத்தில் குமுளி மலைப் பாதையும் ஒன்றாகும். இதனால் வாகனப் போக்குவரத்து அதிகம். தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து கேரளாவிற்கு செல்ல குமுளி மலைப் பாதையை அதிகம் பயன்படுத்துகின்றனர். சபரிமலை சீசன் நேரங்களில் ஐயப்ப பக்தர்களின் வாகனங்கள் அதிகம் செல்லும் முக்கிய வழித்தடமாகும்.முக்கியத்துவம் வாய்ந்த குமுளியில் உள்ள கேரளப் பகுதியில் அனைத்து துறையைச் சேர்ந்த சோதனைச் சாவடி ஒரே இடத்தில் உள்ளது. அனைத்து வாகனங்களும் சோதனைக்கு உட்படுத்தப்பட்ட பின்னரே கேரளாவிற்கு செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். ஆனால் தமிழகப் பகுதியில் வனத்துறை, போலீஸ் சோதனை சாவடி மட்டும் உள்ளது. மலைப்பாதையில் இருந்த வருவாய் துறை சோதனைச் சாவடி சில ஆண்டுகளுக்கு முன்பு அகற்றப்பட்ட நிலையில் மீண்டும் அமைப்பதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கவில்லை.லோயர்கேம்பில் இயங்கி வந்த ஆர்.டி.ஓ., சோனைச் சாவடி 14 ஆண்டுகளுக்கு முன் தேனி பழனிசெட்டிபட்டிக்கு மாற்றப்பட்டது. எல்லைப் பகுதியில் இருந்து 50 கிலோ மீட்டருக்கு மேல் தூரத்தில் உள்ளதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வரும் வாகனங்கள் பெர்மிட் பெறுவதில் அடிக்கடி குளறுபடி ஏற்படுகிறது. 2023ல் வட்டார போக்குவரத்து அலுவலர், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் லோயர்கேம்பில் சோதனைச் சாவடி அமைக்க ஆய்வு மேற்கொண்டனர். ஆனால் இதுவரை நடவடிக்கை இல்லை. இதனால் அனைத்து வாகனங்களும் முழுமையான சோதனைக்கு உட்படுத்த முடிவதில்லை.கடத்தலை முழுமையாக தடுக்க எல்லைப் பகுதியான குமுளியில் அனைத்து துறை சார்பில் ஒரே இடத்தில் ஒருங்கிணைந்த சோதனை சாவடி அமைக்கவேண்டும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே உள்ளது.
21-Jan-2025