மாவட்டத்தில் வாழை மேம்பாடு திட்டம் துவங்குவது எப்போது; மத்திய அரசு அனுமதி வழங்கியும் பணி துவங்காத நிலை
கம்பம்: மத்திய அரசின் 'ஒரு பயிர் ஒரு மாவட்டம்' திட்டத்தின் கீழ் தேனி மாவட்டத்தில் வாழை மேம்பாடு திட்டம் துவங்க அனுமதி வழங்கி இரு ஆண்டுகளை கடத்தும் அதற்கான பணி துவங்கவில்லை.'ஒரு மாவட்டம் ஒரு பயிர்' திட்டத்தின் கீழ் தெலுங்கானா, தமிழ்நாடு மாநிலங்களிலும் வாழை விவசாயிகளுக்கு தொழில்நுட்பம், சாகுபடி, மார்க்கெட்டிங், உள்ளூர் வணிகம், ஏற்றுமதி, குளிரூட்டப்பட்ட கிட்டங்கி, பேக் ஹவுஸ், ஆராய்ச்சி உள்ளிட்ட மேம்பாட்டு பணிகள் செய்ய மத்திய அரசு ரூ.222 கோடி நிதி ஒதுக்கீடு செய்தது. ஏற்றுமதிக்கு தேவையான குளிரூட்டப்பட்ட லாரிகள், அதற்குரிய உபகரணங்கள் இந்த திட்டத்தின் கீழ் பெறலாம்.தேனி மாவட்டத்தில் வாழை சாகுபடி 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் எக்டேரில் மேற்கொள்ளப்படுகிறது. இதில்செவ்வாழை, நேந்திரன், நாழிப் பூவன், ஜி 9 உள்ளிட்ட ரகங்கள் சாகுபடி செய்யப்படுகிறது. வெளிநாடுகளுக்கு குறைந்தளவில் ஏற்றுமதியாகிறது. விவசாயிகள் தொடர்ந்து ஒரே ரகத்தை சாகுபடி செய்வதால் காஞ்சாரை நோய், வெடி வாழை, காற்றில் சாய்வது போன்ற பிரச்னைகள் விவசாயிகள் சந்தித்து வருகின்றனர்.மேலும் வாழைக் கன்றுகள் வாங்குவதிலும் பிரச்னை எழுகிறது. நவீன தொழில் நுட்பங்கள், புதிய ரகங்கள், ரசாயன உரம் மற்றும் பூச்சி மருந்துகள் தெளிக்க வேண்டிய அளவு, அதற்குரிய காலகட்டம் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களில் விவசாயிகளுக்கு உதவ ஆராய்ச்சி நிலையம் சிறிய அளவில் அமைக்கப்பட உள்ளது. ஆனைமலையன்பட்டி திராட்சை ஆராய்ச்சி நிலையத்தின் ஒரு பகுதியில் ஆராய்ச்சி நிலையம் அமைக்க முதலில் ஆய்வு நடைபெற்றது. ஆனால் பணிகளில் முன்னேற்றம் இல்லை. வாழை ஆராய்ச்சி நிலையம் அமையும் பட்சத்தில் சின்னமனூர், உத்தமபாளையம், கம்பம் பகுதி வாழை விவசாயிகளுக்கு வரப்பிரசாதமாக அமையும் என்கின்றனர் விவசாயிகள். ஆனால் இப் பணிகள் மேற்கொள்வதில் காலதாமதம் ஏற்பட்டு வருகிறது.