பெரியகுளம் போலீஸ் சப் -டிவிஷனில் தென்கரை, வடகரை, தேவதானப்பட்டி, ஜெயமங்கலம் 4 ஸ்டேஷன்கள் உள்ளன. தேவதானப்பட்டி இன்ஸ்பெக்டர் கூடுதல் பொறுப்பாக ஜெயமங்கலம் ஸ்டேஷனுக்கு நியமிக்கப்படுகிறார். இதன் கட்டுப்பாட்டில் ஜெயமங்கலம், மேல்மங்கலம், பொம்மிநாயக்கன்பட்டி, குள்ளப்புரம், எருமலைநாயக்கன்பட்டி, ஏ.வாடிப்பட்டி, ஏ. வேலாயுதபுரம், ஏ. ரங்கநாதபுரம், கோயில்புரம், ஏ.புதூர், மருகால்பட்டி, அழகர் நாயக்கன்பட்டி, வேல் நகர் உட்பட 15 உட்கடை கிராமங்கள் உள்ளது. இப்பகுதிகளில் 55 ஆயிரம் மக்கள் வசிக்கின்றனர். ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஆண்டுக்கு சராசரியாக 600 வழக்குகள் பதிவாகின்றன. எனவே ஜெயமங்கலம் போலீஸ் ஸ்டேஷனை தனி இன்ஸ்பெக்டர் தகுதிக்கு தரம் உயர்த்திட வேண்டும். அசாதாரண சூழல் நிலவும் பகுதி
தேவதானப்பட்டி போலீஸ் எல்கையில் கெங்குவார்பட்டி, ஜி கல்லுப்பட்டி, புஷ்பராணி நகர், காமக்காபட்டி, ஏ. மீனாட்சிபுரம், ஸ்ரீராமபுரம் உள்ளிட்ட கிராமங்களில் 25 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் வசிக்கின்றனர். கடந்த இரு ஆண்டுகளில் இப் பகுதியில் ஜாதிமோதல்,கோயில் திருவிழாவில் பிரச்னை, கொலை, கொள்ளை, திருட்டு, மணல் திருட்டு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. தேவதானப்பட்டி ஸ்டேஷனில் ஆண்டில் 300 வழக்குகள் பதிவாகிறது. முக்கிய சுற்றுலா தலமான கொடைக்கானல் செல்லும் ரோடு இப்பகுதியில் உள்ளது. காட்ரோடு பிரிவில் ஏதாவது ஒரு சிறு பிரச்னை என்றாலும் ரோடு மறியல் நடக்கிறது. இதனால் கொடைக்கானலுக்கு செல்லும் உள்நாடு,வெளிநாடு சுற்றுலா பயணிகள் மறியலில் சிக்கி போக்குவரத்து ஸ்தம்பிக்கிறது.சில மாதங்களுக்கு முன் கெங்குவார்பட்டியில் போலீஸ் ஸ்டேஷன் அமைக்க விரிவான அறிக்கையினை அப்போதைய எஸ்.பி., பிரவீன் உமேஷ் டோங்ரே தயார் செய்து காவல்துறை தலைவர், துறை செயலாளருக்கு அனுப்பப்பட்டது.இதுவரை நடவடிக்கை இல்லை. இப்பகுதியில் எப்போதும் அசாதாரண சூழல் நிலவுகிறது. சட்டம் ஒழுங்கு பாதுகாப்பதில் போலீசார் திணறுகின்றனர். நடவடிக்கை தேவை
ஆனந்தகுமார், சமூக ஆர்வலர், கெங்குவார்பட்டி: ஜி.கல்லுப்பட்டியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் தேவதானப்பட்டி ஸ்டேஷன் உள்ளது. இப் பகுதியில் பிரச்னை ஏற்பட்டால் போலீசார் வருவதற்குள் பிரச்னை பெரிதாகிறது. திடீரென ஏற்படும் மறியல், போராட்டங்களால் கொடைக்கானல் வரும் சுற்றுலா பயணிகள் கடும் அவதிக்குள்ளாகின்றனர். எனவே கெங்குவார்பட்டியை மையப்படுத்தி ஸ்டேஷன் புதிதாக துவங்க வேண்டும் என்பது இப் பகுதி மக்களின் நீண்டகால கோரிக்கை. இதனை ஏற்று புதிதாக தனி சர்கிள் இன்ஸ்பெக்டர் ஸ்டேஷன் உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.