| ADDED : ஜன 12, 2024 06:40 AM
போடி : போடி வினோபோஜி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் கடையை முற்றுகையிட்டனர்.போடி பழைய பஸ்ஸ்டாண்ட், கருப்பசாமி கோயில் தெரு, வினோபாஜி காலனி செல்லும் ரோடு கோயில், பள்ளிகளுக்கு செல்லும் முக்கிய பாதையாக உள்ளது. போடி பி.ஹைச்., ரோட்டில் இருந்து பழைய பஸ்ஸ்டாண்ட் செல்லும் ரோடு, வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் டாஸ்மாக், பார்களும் உள்ளன. இப்பகுதியில் காலை முதல் இரவு வரை மது பிரியர்களின் கூட்டம் அதிகரித்து வருகிறது. பழைய பஸ்ஸ்டாண்ட் வினோபாஜி காலனி செல்லும் ரோட்டில் மாலை 6:00 மணிக்கு மேல் மது போதையில் கூட்டமாக நின்று டியூஷன், கூலி வேலைக்கு சென்று திரும்பும் பெண்களை கேலி செய்வதும், பின் தொடர்ந்து தொல்லை தருவதும் அதிகரித்து வருகிறது. இதனால் இரவில் பெண்கள் நடந்த செல்ல அச்சம் அடைந்து வருகின்றனர். இதனை கண்டித்து நேற்று வினோபாஜி காலனியில் உள்ள டாஸ்மாக் கடையை மூடக்கோரி பெண்கள் முற்றுகை செய்தனர்.போடி தாலுகா இன்ஸ்பெக்டர் ரமேஷ் குமார், தாசில்தார் அழகுமணி பேச்சுவார்த்தை நடத்தினர். ஒரு மாதத்திற்குள் டாஸ்மாக் கடை இடமாற்றம் செய்யப்படும். என கூறியதன் பேரில் கலைந்து சென்றனர்.