வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி தீவிரம்
தேனி : வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர். மேலும், தேவையின்றி பொதுமக்கள் வனப்பகுதிகளுக்குள் செல்வதை தவிர்க்கவும் எச்சரித்துள்ளனர்.மாவட்டத்தில் அதிகளவு வனப்பகுதிகளாக உள்ளன. வனப்பகுதிகளில் கோடை காலங்களில் தீ பற்றி எரிவது ஆண்டு தோறும் மார்ச் முதல் ஜூன் வரை ஆங்காங்கே பதிவாகிறது.சில ஆண்டுகளுக்கு முன் குரங்கனிப்பகுதியில் ஏற்பட்ட தீவிபத்தில் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். வனத்தீ தடுப்பு முன்னெச்சரிக்கைநடவடிக்கையாக மாவட்ட முழுவதும் வனப்பகுதிகளில் தீ தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை வனத்துறையினர் தீவிரப்படுத்தி உள்ளனர்.தேனி வனச்சரகத்திற்கு உட்பட்ட வரட்டாறு, சன்னாசியப்பன் கோயில், முத்துக்கோம்பை, பூதிப்புரம், அருங்குளம், உலக்கை உருட்டி ஆறு, போடி வடக்கு காப்பு காடுகள் பகுதிகளில் ரேஞ்சர் சிவராம் தலைமையிலான வனத்துறையினர் தீ தடுப்புக் கோடுகள் அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். வனத்துறையினர் கூறுகையில், இந்த கோடுகள் 3 முதல் 6 மீட்டர் வரையில் அமைக்கப்படுகின்றன. தீ ஏற்பட்டாலும் மற்ற இடங்களுக்கு தீ பரவாமல் இருக்கு இவை ஏற்படுத்தப்படுகின்றது. இந்த கோடுகளை பாதைகளாகவும் ரோந்து பணியின் போது பயன்படுத்தப்படுகிறது. கோடை காலங்களில் பொதுமக்கள் தேவையின்றி வனப்பகுதிக்குள் நடமாடுவதை தவிர்க்க வேண்டும். மீறினால் வனச்சட்டத்தின் படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றனர்.