ஆறுகளில் சேதமான உறை கிணறுகளை சீரமைக்க முடிவு சேத விபரங்களை கணக்கிடும் பணிகள் தீவிரம்
தேனி: முல்லைப் பெரியாறு, கொட்டக்குடி, மூலவைகை, வராக நதி ஆறுகளில் உள்ள கூட்டுக்குடிநீர் திட்ட உறைகிணறுகள், பம்பிங் மோட்டார்கள், குழாய்கள் சீரமைக்க சேத விபரங்களை கணக்கிடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன..'' என, குடிநீர் வடிகால் வாரியம் தெரிவித்துள்ளது. மாவட்டத்தில் மொத்தம் 27 கூட்டுக் குடிநீர் திட்டங்களில் கனமழை வெள்ளத்தில் 18 திட்டங்களில் உள்ள பகிர்மான குழாய், மோட்டார்கள், உறை கிணறுகள் சேதமடைந்தன. வெள்ளப் பாதிப்பால் பல இடங்களில் பகிர்மான குழாய் செல்லும் ரோடுகள் சேதமடைந்தன. இதனால் பல பகுதிகளில் குடிநீர் வினியோகம் பாதித்தது. இதனை சீரமைக்கும் பணியில் குடிநீர் வாரியம் தீவிரம் காட்டி வருகிறது. 7 நாட்களாக ஆய்வு செய்த குடிநீர் வாரிய அதிகாரிகள் 18 திட்டங்களில் ஏற்பட்டுள்ள பாதிப்பை தற்காலிகமாக சீரமைத்து, பொது மக்களுக்கு குடிநீர் கிடைப்பதை உறுதி செய்துள்ளனர். மேலும் முல்லைப் பெரியாறு, மூல வைகை, கொட்டக்குடி, வராகநதி, வைகை ஆற்றங்கரையோரப் பகுதிகளில்உள்ள கூட்டுக்குடிநீர் திட்டபாதிப்புக்களை தண்ணீர் வற்றிய பின் முழுமையான சேத விபரம் தெரியும். அதன்பின் நிரந்தரமாக சீரமைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். நிரந்தர சீரமைப்புக்கான தொகையைகணக்கிட்டு, அதற்கான பரிந்துரையை மாநில குடிநீர் திட்ட வாரிய இயக்குனரகத்திற்கு அனுப்பியுள்ளது குறிப் பிடத்தக்கது.