நேற்றும் சிறுத்தை நடமாட்டம் கூண்டு வைத்து பிடிக்க கோரிக்கை ட்ரோன் மூலம் கண்டறிய வலியுறுத்தல்
பெரியகுளம்: பெரியகுளம் கோயில்காடு பகுதியில் நேற்றும் சுற்றித்திரிந்த சிறுத்தையை,' ட்ரோன்' கேமரா மூலம் கண்டறிந்து கூண்டு வைத்து விரைவாக பிடிக்க விவசாயிகள் கோரியுள்ளனர். பெரியகுளம் கைலாசபட்டி மலை அடிவாரத்தில் கோயில்காடு பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயம் நடக் கிறது. இப்பகுதியில் சிறுத்தை நடமாட்டத்தால் மூன்று நாட்களில் தோட்டங்களில் வளர்க்கப்படும் 10 நாய்கள், கடந்த வாரம் மானையும் சிறுத்தை வேட்டையாடியது. வனத்துறையினர் சிறுத்தையை விரைந்து பிடிக்க கோரி வருகின்றனர். இந்நிலையில் நேற்று கோயில்காடு பகுதியில் சிறுத்தை நடமாடியதை விவசாயிகள் பார்த்து அச்சமடைந்துள்ளனர். மனித உயிர்களுக்கு அச்சுறுத்துதலை ஏற்படுத்தும் சிறுத்தை நடமாட்டத்தால், கோயில் காடு தோட்டத்திற்கு வேலைக்கு செல்வதற்கு விவசாய தொழிலாளர் அச்சப்படுகின்றனர். இரவு காவல் பணிக்கு செல்ல தயங்குகின்றனர். வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறிய இரு கண்காணிப்பு கேமரா பொருத்தியுள்ளனர். இது போதுமானதாக இல்லை. 'ட்ரோன்' கேமராக்கள் மூலம் சிறுத்தை நடமாட்டத்தை கண்டறியலாம். அந்தப்பகுதியில் கூண்டு வைத்து பிடிக்க முயற்சிக்க வேண்டும். விவசாயிளகள் வனத்துறைக்கு ஆடு தர தயாராக உள்ளோம் என கோயில்காடு புரவு விவசாயிகள் தெரிவிக்கின்றனர். விரைவாக சிறுத்தையை வனத்துறை பிடிக்க வேண்டும்.பொதுமக்கள் அச்சத்தை போக்க வேண்டும் என்றனர்.