உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / தேனி / தொழில் போட்டியில் வாலிபர் வெட்டி கொலை : சகோதரர்களுக்கு ஆயுள்

தொழில் போட்டியில் வாலிபர் வெட்டி கொலை : சகோதரர்களுக்கு ஆயுள்

தேனி: தேனி மாவட்டம் கூடலுாரைச் சேர்ந்த தேங்காய் வெட்டும் தொழில் செய்த அருண்குமாரை 24, தொழில் போட்டியால் கொலை செய்த சகோதரர்கள் காமயக்கவுண்டன்பட்டி யூனியன் பள்ளித்தெரு கீர்த்தி 25, அவரது தம்பி கிரென் 22, ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. கூடலுார் சாமாண்டிபுரம் பால்பாண்டி மகன் அருண்குமார் 24, தேங்காய் வெட்டும் தொழில் செய்து வந்தார். இந்த பணிக்கு வேலையாட்களை அழைத்து செல்வதில் சக தொழில் செய்யும் கீர்த்திக்கும், அருண்குமாருக்கும் ஏற்பட்ட போட்டியில் தகராறு நடந்தது. 2023 செப்., 27ல் கருநாக்கமுத்தன்பட்டியைச் சேர்ந்த அஜித்குமார் என்பவர் துாக்கிட்டு இறந்தார். அவரது உடல் அடக்கம் செய்ய கருநாக்கம்முத்தம்பட்டி சுடுகாட்டிற்கு கொண்டு வரப்பட்டது. அப்போது அஜித்குமாரின் உடலுக்கு யார் முதலில் மாலை அணிவிப்பது என்பதில் கீர்த்திக்கும், அருண்குமாருக்கும் மீண்டும் தகராறு ஏற்பட்டது. 2023 செப்., 29 இரவு அரவிந்த் சாமாதானம் பேச அழைக்க, நண்பர் நாகராஜூடன் சென்ற அருண்குமாரை கீர்த்தி, கிரென் அரிவாளால் வெட்டினர். அருகில் இருந்த பாண்டியன் ஆயுதத்தால் குத்த முயற்சித்தார். சம்பவ இடத்தில் அருண்குமார் இறந்தார். கூடலுார் தெற்கு போலீசார் விசாரித்து கீர்த்தி, கிரென், அரவிந்த், பாண்டியன் ஆகியோரை கைது செய்தனர். இவ்வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடந்தது. கீர்த்தி, கிரெனுக்கு ஆயுள் தண்டனை, தலா ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி சொர்ணம் ஜெ.நடராஜன் தீர்ப்பளித்தார். அரவிந்த், பாண்டியன் விடுதலை செய்யப்பட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ