உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / தமிழகத்தில் மின்சார தேவைக்கு நவீன நீர்வழிச்சாலை திட்டமே நிரந்தர தீர்வு

தமிழகத்தில் மின்சார தேவைக்கு நவீன நீர்வழிச்சாலை திட்டமே நிரந்தர தீர்வு

சங்கரன்கோவில்:தமிழகத்தின் வருங்கால மின்சார தேவைக்கு 'தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டம்' தான் நிரந்தர தீர்வு என்று மத்திய அரசு நதிநீர் இணைப்பின் உயர் மட்டக்குழு உறுப்பினர் காமராஜ் தெரிவித்தார்.சங்கரன்கோவிலில் நேற்று மத்திய அரசு நதிநீர் இணைப்பின் உயர்மட்டக்குழு உறுப்பினர் காமராஜ் நிருபர்களிடம் கூறியதாவது:தற்போது தமிழகம் முழுவதும் மின் பற்றாக்குறை அதிகமாக உள்ளது. இதனால் தொழிற்சாலைகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களின் அன்றாட வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டு இருக்கிறது. வருங்காலத்தில் மின்சார தேவை அதிகமாக தான் இருக்குமே தவிர குறைய வாய்ப்பில்லை. இதற்கு 'தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டம்' தான் நிரந்தர தீர்வு. இந்த திட்டம் நதிநீர் இணைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது.தமிழ்நாடு நீர்வழிச்சாலை திட்டத்தின் மூலம் எந்த ஒரு நதியில் தண்ணீர் அதிகமாக இருந்தாலும், அதனை தேவைப்படும் மற்ற நதிக்கோ அல்லது நதிகளுக்கோ தேவைப்படும் பொழுது கொண்டு செல்ல முடியும். இந்த திட்டத்தில் உபரி நீரான வெள்ள நீர் மட்டுமே எடுக்கப்படுவதால் நமக்கு ஏராளமான தண்ணீர் கிடைக்கிறது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் உயரும். இதனால் விவசாயத்திற்கும், குடிநீருக்கும் பயன்படுத்திக் கொண்டிருக்கும் மின்சாரத்தில் 1300 மெகாவாட் சேமிக்கப்படும். மேலும் இந்த திட்டத்தின் மூலம் 1800 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படும்.தமிழக நதிகளை இணைக்கும் நீர்வழிச்சாலை திட்டத்தின் மூலம் வெள்ள நீரை குடிநீருக்கும், பாசனத்திற்கும் பயன்படுத்தலாம். இத்திட்டத்தில் போக்குவரத்திற்கு எண்ணெய் செலவு ஏராளமாக குறைவதாலும், நீர்மின் உற்பத்தி கிடைப்பதாலும் இத்திட்டம் நேரடியாகவும், மறைமுகமாகவும் சுற்றுப்புறச் சூழலை மேம்படுத்தும். இத்திட்டத்தில் ஆண்டு முழுவதும் போக்குவரத்திற்கு பயன்படும் 900 கி.மீ., நீளக் கால்வாய் அமைவதால் நீர்வழிப் போக்குவரத்து அமையும். பல கோடி மக்களுக்கு ஆண்டு முழுவதும் குடிநீர் கிடைக்கும். ஏராளமான நிலம் கூடுதலாக பாசன வசதி பெறும். அனைத்து மக்களுக்கும் வேலை கிடைக்கும். உற்பத்தி பெருகி விலைவாசி குறையும்.இந்த திட்டத்தில் நீர்வழிச்சாலை சங்கரன்கோவிலுக்கு அருகிலேயே வருவதால் இப்பகுதியில் உள்ள அனைத்து மக்களுக்கும் வேண்டிய குடிநீரும், பாசன வசதியும் கிடைக்கும். அதேநேரத்தில் தமிழ்நாட்டில் செயல்படுத்தக்கூடிய வேறு எந்த நதிநீர் இணைப்பு திட்டத்திலும் சங்கரன்கோவில் பகுதி மக்களுக்கு எந்த பலனும் கிடைக்காது. தமிழக முதல்வர் தேர்தல் அறிக்கையில் நீர் வழிச்சாலை திட்டத்தை நிறைவேற்றுவதாக அறிவித்து இருக்கிறார். இந்த திட்டத்தினால் அரசுக்கு நிதிச்சுமை கிடையாது. தேசிய நெடுஞ்சாலை போன்று தனியாரையும் இணைத்து செயல்படுத்தலாம்.கடந்த 60 ஆண்டுகளாக செயல்படுத்த இயலாமல் இருக்கும் நதிநீர் இணைப்பிற்கு மாற்றுத் திட்டமான கங்கா-குமரி தேசிய நீர்வழிச்சாலை திட்டத்தின் அடிப்படையில் அமைந்த தமிழ்நாடு நவீன நீர்வழிச்சாலை திட்டத்தை விரைந்து நிறைவேற்ற முதல்வரை அனைவரும் கேட்டுக் கொள்ள வேண்டும்.இதுகுறித்து சங்கரன்கோவில் பகுதியில் கடந்த 20 நாட்களாக எடுக்கப்பட்ட கருத்துக்கணிப்பில் நீர்வழிச்சாலை திட்டம் வேண்டும் என்று 96 சதவீதம் பேரும், தெரியாது என 4 சதவீதம் பேரும் கருத்து கூறி இருக்கின்றனர். இந்த திட்டம் வேண்டாம் என்று யாரும் கருத்து சொல்லவில்லை.இவ்வாறு காமராஜ் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்