உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை

விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை

திருநெல்வேலி: ''விரும்பிய மொழிகளை படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை,'' என, திருநெல்வேலி அருகே செங்குளத்தில் அகில உலக அய்யாபதிகள் கூட்டமைப்பு சார்பில் நடந்த அய்யா வைகுண்டரின் 193 வது அவதார தின விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி வேதனை தெரிவித்தார்.விழாவிற்கு தலைமை வகித்த கவர்னர் ஆர்.என்.ரவி தமிழ், மலையாளம், ஹிந்தி, ஆங்கிலம் ஆகிய மொழிகளில் 'ஸ்ரீ மகா விஷ்ணுவின் அவதாரம் அய்யா வைகுண்டர் அருளிய சனாதன உபதேசங்கள்' என்ற நூலை வெளியிட்டார். போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள், சிறந்த அய்யாவழி ஆளுமைகளுக்கு விருதுகளையும் அவர் வழங்கினார்.பின் அவர் பேசியதாவது: ஆங்கிலேயர்கள் நம் சனாதன தர்மத்தை, பண்பாட்டை சிதைக்க முற்பட்டனர். அப்போது தான் மகாவிஷ்ணு வைகுண்டராக பிறப்பெடுத்தார். பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் பிரிக்க முடியாது. சனாதனத்தால் உருவாக்கப்பட்டது தான் பாரதம். தமிழ் மண் புண்ணிய பூமி. இது பாரதத்தின் ஆன்மிக, சனாதன தர்மத்தின் தலைநகராக விளங்குகிறது.பாரதத்தில் வெவ்வேறு மொழி பேசுபவர்கள், வெவ்வேறு இனத்தினர், உடை உணவு கலாசாரங்களால் வேறுபட்டவர்களாக வாழ்ந்தாலும் நாம் அனைவரும் சனாதன குடும்பத்தினர் தான். சனாதன தர்மத்தில் வேறுபாடுகள் இல்லை. அதைத்தான் அய்யா வைகுண்டர் போதித்தார்.உலகிற்கு உதவும் வல்லமை பெற்ற நாடாக பாரதம் வளர்ந்து இருக்கிறது. கொரோனா தொற்று காலத்தில் 150 நாடுகளுக்கு தடுப்பூசிகளை வழங்கி அவர்களுடைய துயரத்தில் பங்கெடுத்தது பாரதம். உலகமே திரும்பிப் பார்க்கக்கூடிய மதிப்புமிக்க நாடாக இந்தியா உயர்ந்துள்ளது. பத்தாண்டுகளில் மிகப்பெரிய சனாதனியான பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான இந்தியாவில் மிகப்பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பல்வேறு மாநிலங்களில் வெவ்வேறு கட்சிகள் ஆட்சியில் இருந்தாலும் பிரதமர் மோடி யாரிடமும் பாகுபாடு காட்டுவதில்லை. தமிழகத்திற்கும் ஏராளமான வளர்ச்சித்திட்டங்களை வழங்கியுள்ளார். சமீபத்தில் டில்லியில் மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவிடம் பேசினேன். தமிழகத்தில் ரூ. 50 ஆயிரம் கோடி மதிப்பிலான ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாக அவர் தெரிவித்தார்.தமிழ் மொழி, தமிழ் கலாசாரம், பண்பாட்டிற்கு பிரதமர் மோடி முக்கியத்துவம் தருகிறார்.கடந்த 3 ஆண்டுகளாக காசி தமிழ் சங்கமம் நடக்கிறது. தமிழகத்திற்கும் காசிக்கும் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய தொடர்பு உள்ளது. கடந்த 45 நாட்களாக பிரயாக்ராஜில் நடைபெற்ற மகா கும்பமேளாவில் 66 கோடி பேர் புனித நீராடினர்.கும்பமேளாவில் பல்வேறு பிராந்தியங்கள், பல்வேறு மொழிகள், பல்வேறு இனங்களைச் சேர்ந்தவர்கள் பங்கேற்ற போதிலும், யாரும் ஒருவருக்கொருவர் நீங்கள் எந்த பகுதி, எந்த மொழி என கேட்டுக்கொள்ளவில்லை. அவர்கள் அனைவரும் ஒரே குடும்பமாகத்தான் ஒன்றிணைந்து நீராடினர். சனாதனத்தின் மெய்யான உணர்வு அதில் பிரதிபலித்தது. இந்தியாவிலும், இந்தியாவுக்கு வெளியிலும் உள்ள சில சக்திகள் சனாதனத்தின் வளர்ச்சியையும், இந்தியாவின் வளர்ச்சியையும் விரும்ப வில்லை. பிரிவினைகளை ஏற்படுத்தி சனாதன தர்மத்தை அழிக்கப் பார்க்கிறார்கள். ஆங்கிலேயர்கள் சூழ்ச்சியால் நம்மை பிரித்து ஆண்டார்கள். தற்போதும் சில சக்திகள், சித்தாந்தவாதிகள், பாரதத்தையும், சனாதன தர்மத்தையும் அழிக்க முயற்சிக்கிறார்கள். சனாதனத்தை அழிக்க முடியாது.மொழியை திணிக்கிறார்கள் என்ற பொய்யையும் புரட்டையும் கட்டவிழ்த்து விடுகிறார்கள். மற்ற மாநில மாணவர்களைப்போல விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை. மாணவர்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும். இது நமது இளைஞர்களுக்கும் அவர்களுடைய எதிர்காலத்திற்கும் நல்லதல்ல.தமிழ் மொழியையும் கலாசாரத்தையும் பிரதமர் மோடி உலகம் முழுவதும் எடுத்து சென்றுள்ளார். அதற்காக பிரதமருக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி, அய்யா வைகுண்டர் வழியை பின்பற்றுகிறார். இந்த நாடும் சமூகமும் அய்யா வழியை பின்பற்ற வேண்டும். அப்படி பின்பற்றினால் சமூக நீதி பேசத் தேவையில்லை.இவ்வாறு கவர்னர் ஆர்.என்.ரவி பேசினார். ஏற்பாடுகளை அய்யாபதிகள் கூட்டமைப்பின் தலைவர் வழக்கறிஞர் ராமலிங்கம் செய்தார்.

ஐரோப்பிய கலாசாரத்தை திணித்தனர்

திருநெல்வேலியில் மதன் மோகன் மாளவியா வித்யா கேந்திரத்தின் 33வது ஆண்டு விழாவில் கவர்னர் ஆர்.என்.ரவி பேசியதாவது: ஆங்கிலேயர் ஆட்சி செய்த போது அவர்கள் நம் கலாசாரத்தையும் பாரம்பரியத்தையும் அழிக்க முயன்றனர். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு தேசபக்தி அர்ப்பணிப்பு உணர்வை மக்களிடம் வளர்த்தது. நம் அடையாளம், கலாசாரம் இன்னும் நிலைத்திருக்க ஆர்.எஸ்.எஸ்., பெரும் பங்காற்றியது. ஆங்கிலேயர் பாரதிய கல்வி முறையை அழித்து ஐரோப்பிய கல்வி முறையை திணித்தனர். நாம் அடிமையாக வாழ்ந்தோம். நம் அடையாளங்களை அழித்தனர். இதற்கு எதிராக மதன்மோகன் மாளவியா பாரதிய கலாசாரம் மற்றும் பாரம்பரியத்துக்கு முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பனாரஸ் மத்திய ஹிந்து கல்லூரியை உருவாக்கினார். இந்தியா என்பது ஒரு அரசியல் நாடு. ஆனால் பாரதம் என்பது தொன்மை, நாகரிகம், கலாசாரத்தின் அடையாளம். புரட்சிகவிஞர் சுப்பிரமணிய பாரதி 30 கோடி முகமுடையாள் சிந்தனை ஒன்றுடையாள் என்று பாடியுள்ளார். ஆனால் தற்போது இந்த சிந்தனையும் 18 ஆக உடைந்துள்ளது. நாம் ஒருமித்த பாரத சிந்தனையை கொண்டிருக்க வேண்டும் என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 7 )

Priyan Vadanad
மார் 02, 2025 15:44

இத்தனை நாள் தமிழ்நாட்டு திண்ணையில் டேரா போட்டிருக்கும் ரவியாரை தமிழ் படிக்கச் தடுத்தது யார்? அவர் தமிழ் பேசுவதை தடுத்து யார்? எனக்கு உண்மை தெரிஞ்சாகணும்.


karthikeyan
மார் 02, 2025 14:28

ஆடு நனையுதே என்று ஓநாய் அழுத கதையாக இருக்கிறது, எதை படிக்கவேண்டும் எதை உண்ன வேண்டும் என்பது தமிழக மக்களுக்கு நன்கு தெரியும்.


Palanivelu Kandasamy
மார் 02, 2025 13:17

"மற்ற மாநில மாணவர்களைப்போல விரும்பிய மொழிகளைத் தேர்வு செய்து படிக்கும் சுதந்திரம் தமிழக மாணவர்களுக்கு இல்லை" - எந்தெந்த மாநிலங்களில் மூன்றாவது மொழி கற்றுத்தரப் படுகிறது என்று சொல்வாரா? வட மாநிலங்களில் ஆங்கிலமே சொல்லிக் கொடுப்பதில்லையே. அங்கே போய் இதை சொல்லியிருக்கலாம்.


chennai sivakumar
மார் 02, 2025 15:04

ராஜஸ்தான் சுற்றுலா சென்றபோது ஒரு உயர்ந்த ஹோட்டலில் பில் கொடுத்துக்கொண்டு இருந்தார் என் சகலை. அங்கு வரவேற்பில் டிவி யில் ஹிந்தி நிகழ்ச்சி ஓடிக்கொண்டு இருந்தது. நான் சென்று வர ஏற்பாளரிடம் ஆங்கில செய்தி வைக்குமாறு கேட்டேன். அதற்கு அவர் எங்க ஊர் கேபிள் டிவியில் ஆங்கில சேனல்கள் கிடையாது என்றார். நான் மயக்கம் போடாத குறையாக மூட்டை கட்டிக்கொண்டு வந்து விட்டேன்.


K.n. Dhasarathan
மார் 01, 2025 23:05

ஐயா முன்னாள் ஆளுநர் ரவி அவர்களே " விரும்பிய மொழியை படிக்கும் சுதந்திரம் தமிழகத்தில் இல்லை " என்று வேதனை படுகிறீர்களா ? பாவம் கவலையில் இளைத்து போய்விடாதீர்கல், அவ்வளவு வேதனைப்படாமல் உங்கள் வேலைகளை கொஞ்சமாவது பாருங்கள், எத்தனையோ மோசடி பேர்வழிகள், கொள்ளைக்காரர்கள் கோப்புகள், உங்களிடம், பெண்டிங்க்கில் வைத்துள்ளீர்கள், கொஞ்சம் அதை கையெழுத்து போட்டு அனுப்புங்கள், இல்லையெனில் குற்றங்களுக்கு உடந்தை ஆனதற்கு சமம், நீதி தேவதையை வேதனைப்படுத்தாதீர்கள்.தான் வேதனை பட்டாலும் அடுத்தவர்களை வேதனை படுத்தாதீர்கள். அந்த பாவம் சும்மா விடாது.


Sampath Kumar
மார் 01, 2025 16:43

அப்படி எல்லாம் ஒன்றும் கிடையாது யாரும் ஏந்த மொழியை வேடுமாலும் படிக்கலாம் அதற்கு ஒரு தடையும் கிடையாது ங்க பிஜேபி அரசு ஹிந்தியை திண்ணிக் பலே வேலைகளை செய்து வருகிறது தமிழ் நாட்டில் அரசியில் காட்சிகள் மட்டும் அல்ல மக்களும் திணிப்பை நுமதிக்க மாட்டார்கள் இந்த செயதியில் உண்மை இல்லை கவனீர் தனது பொறுப்பை உன்னார்ந்து பேசவேண்டும் சும்மா உருட்ட கூடாது


Sridhar
மார் 01, 2025 15:49

நீங்களே ஒரு முன்னாள் IB ஆபீசர். உங்கள் வட்டாரத்தில் தமிழகத்தில் நடக்கும் போதை கலாச்சாரம் பற்றிய தகவல்கள் நிறையவே இருக்கும். அதற்கும் மேலே தீவிரவாதம், பாலியல்வன்முறைனு ஏகப்பட்ட விசயங்கள் கண்கூட நடந்துகொண்டு இருக்கும்போது, ஒரு நடவடிக்கயும் இல்ல, ஒரு குற்றவாளியும் தண்டிக்கப்படவில்லைனா, அப்புறம் குற்றவாளிகளுக்கு துளிர் விட்டுவிட்டதுனு சொல்றதுல என்ன நியாயம் இருக்கும்? திருட்டு கும்பல் தமிழகத்தின் வளங்களை சூறையாடுவதோடு மட்டும் இல்லாமல் மிக பெரிய சமூக கொடுமைகளை செய்துகொண்டிருக்கிறது. இதில் திருட்டு குடுமபத்தை சேர்ந்த ஆட்களும் நேரடியாக சம்பந்தப்பட்டிருக்கிறார்கள் என்று தெரிந்தும் மத்திய அரசு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தால், திருடர்களுக்கு எப்படி பயம் வரும்? இப்படித்தான் அர்த்தமே இல்லாமல் "திணிப்பு" குனிப்புன்னு வாய்க்கு வந்ததை தைரியமாக சொல்லி மக்களை மழுங்கடிக்க செய்வார்கள். இதற்க்கு உடந்தையாக இருக்கும் மத்திய அரசு தமிழக மக்களுக்கு மாபெரும் துரோகம் இழைக்கிறது என்பதில் சந்தேகமே இல்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை