திருநெல்வேலி நீர்நிலைகளை மத்திய நீர்வளக்குழு ஆய்வு
திருநெல்வேலி:மத்திய ஜல் சக்தி அமைச்சகத்தின் சார்பில் வழங்கப்படும் 6வது தேசிய நீர் விருதுக்காக திருநெல்வேலி நீர் நிலைகளை விஞ்ஞானிகள் குழுவினர் ஆய்வு செய்தனர்.நீர்நிலைகள் பராமரிப்பில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு மத்திய ஜல் சக்தி அமைச்சகம் சார்பில் வழங்கப்படும் 6வது தேசிய நீர் விருதுக்காக தமிழகத்தில் நாமக்கல், திருநெல்வேலி மாவட்டங்கள் முதற்கட்டமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.மத்திய நிலத்தடி நீர் வளத்துறை விஞ்ஞானி ராஜ்குமார் மற்றும் மத்திய நீர் அமைச்சக செயற்பொறியாளர் பன்னீர்செல்வம் தலைமையிலான குழுவினர் திருநெல்வேலியில் நீர்நிலைகள் மற்றும் நீர் மேலாண்மை திட்டங்களை ஆய்வு செய்தனர். வன்னிகோனேந்தல் அரசு மேல்நிலைப்பள்ளியில் சொட்டு நீர் பாசனம் மூலம் மேற்கொள்ளப்பட்ட பசுமையான வளாகம், வண்ணாரப்பேட்டை பலாப்பழ ஓடை, வேய்ந்தான்குளம் மற்றும் தாமிரபரணி - கருமேனியாறு - நம்பியாறு நதிநீர் இணைப்பு திட்டம் உள்ளிட்டவைகளையும் ஆய்வு செய்தனர். மேலும் மாவட்ட நிர்வாகம் விண்ணப்பத்தில் குறிப்பிட்ட 2024 -2025 நிதியாண்டில் மேற்கொள்ளப்பட்ட பணிகள், குளங்கள் சீரமைப்பு போன்றவை ஆய்வு செய்யப்பட்டன. மூன்று நாட்கள் நடக்கும் இந்த கள ஆய்விற்கு பிறகு மத்திய குழுவினர் அறிக்கையை மத்திய அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளனர்.