உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / காங்., பிரமுகர் கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

காங்., பிரமுகர் கல் குவாரி அமைக்க கருத்து கேட்பு கூட்டத்தில் எதிர்ப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி அருகே அடைமிதிப்பான்குளத்தில் ஏற்கனவே நான்கு பேரை காவு வாங்கிய குவாரியை, காங்., பிரமுகர் செல்வராஜ் புதிதாக அமைக்க மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் நடத்திய கருத்து கேட்புக் கூட்டத்தில் பங்கேற்றோர் எதிர்ப்பும் ஆதரவும் தெரிவித்தனர். திருநெல்வேலி, அடைமிதிப்பான்குளத்தில் திசையன்விளை காங்., பிரமுகர் செல்வராஜ் குத்தகைக்கு எடுத்து நடத்திய கல்குவாரியில், 2022 மே 14ல் பாறை சரிந்து விபத்து ஏற்பட்டது. இதில், 4 பேர் பலியாகினர். மேலும் சிலர் காயமுற்றனர். 2023ல் அந்த குவாரி மூடப்பட்டது. அதன் அருகில் புதிய குவாரி அமைக்க செல்வராஜ் மீண்டும் தற்போது விண்ணப்பித்துள்ளார். அந்த குவாரிக்கான சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்தின் உத்தரவின்படி, நேற்று அடைமிதிப்பான் குளம் அருகே செங்குளத்தில் தனியார் மண்டபத்தில் கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. சுற்றுச்சூழல் இன்ஜினியர் கிருஷ்ணா பாபு தலைமை வகித்தார். வருவாய்த்துறை அதிகாரிகள் பங்கேற்றனர். அப்பகுதியை சேர்ந்த சங்கர் பேசியதாவது: அடைமிதிப்பான்குளம் சுற்றுவட்டாரத்தில் குவாரிகள் அமைக்கப்பட்டதால் மாசு அடைந்துள் ளது. ஐந்தாண்டுகளில் ஊரில் 21 பேர் புற்றுநோயால் இறந்துள்ளனர். என் தாய் லட்சுமி, புற்று நோயால் இறந்தார். எனவே குவாரி அமையக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார். அவரை போல பலரும் குவாரி அமைப்பதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தனர். சுற்றுச்சூழல் ஆர்வலர் எஸ்.பி.முத்துராமன் பேசுகையில், 'நான்கு பேர் இறந்த குவாரிக்கு 100 மீட்டர் துாரத்தில் புதிய குவாரி அமைகிறது. இதனால் பாறை சரிவு ஏற்பட வாய்ப்புள்ளது. இவர்கள் 2019-ல் அந்த விபத்துக்கு முன்பாக விண்ணப்பித்த மனுவாகும். ' 'இதுகுறித்து அரசுக்கு தற்போது தெரிய வாய்ப்பில்லை. அரசு அந்த விபத்தையும் கணக்கிட்டு இந்த குவாரிக்கு அனுமதி தரக்கூடாது,'' என்றார். அப்போது குவாரி ஆதரவாளர்கள் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து தள்ளுமுள்ளு ஏற்படும் நிலை உருவானது. அதிகாரிகள் இரு தரப்பினரையும் அமைதிபடுத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி