உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு

திருநெல்வேலி:திருநெல்வேலி மாநகராட்சி கூட்டத்தில் சர்ச்சைக்குரிய தீர்மானங்களை நிறைவேற்ற கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். நெல்லை மாநகராட்சியில் மேயராக சரவணன், துணை மேயராக ராஜு பதவி வகிக்கின்றனர். தி.மு.க.,வைச் சேர்ந்த மேயர் சரவணனை பதவி நீக்கம் செய்யக்கோரி தி,மு.க., கவுன்சிலர்க்ளே நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்ததால், மூன்று மாதங்களாக மாநகராட்சிக் கூட்டம் முறையாக நடக்கவில்லை.நெல்லை மாவட்ட பொறுப்பு அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் தி.மு.க., மேலிட நிர்வாகிகள் கேட்டுக் கொண்டதால் நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கவுன்சிலர்கள் வாபஸ் பெற்றனர். இதைத் தொடர்ந்து, மாநகராட்சி கூட்டம் நேற்று முன் தினம் மாலை நடந்தது.

எதிர்ப்பு

மேயர், துணை மேயர் மற்றும் கமிஷனர் மற்றும் பெரும்பாலான கவுன்சிலர்கள் பங்கேற்றனர். கூட்டம் துவங்கியதும் 1 முதல் 28 வரை தீர்மானங்கள் நிறைவேறியது என மேயர் வழக்கம் போல அறிவிக்க முயன்றார். ஆனால், கவுன்சிலர்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். முதலில் வார்டு வாரியாக குறைகளை தெரிவித்த பிறகு கடைசியில் ஒவ்வொரு தீர்மானத்தையும் வாசித்து நிறைவேற்ற வேண்டும் என்றனர். மேலும், நில ஆக்கிரமிப்பு தொடர்பான சில சர்ச்சைக்குரிய தீர்மானங்களை ஏற்றுக்கொள்ள முடியாது என எதிர்ப்பு தெரிவித்தனர்.மண்டல வாரியாக குறைகளை கவுன்சிலர்கள் கூறினர். மாலை 5:00 மணிக்கு துவங்கிய கூட்டம் இரவு 9:30 மணியை கடந்தும் நடந்தது.துப்புரவு பணியை கவனிக்கும் நிறுவனத்துக்கு கவுன்சிலர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். தங்கள் பகுதி குறைகளை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரி மேயர், கமிஷனர் முன் தரையில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.கமிஷனர் தாக்கரே ஒவ்வொரு கவுன்சிலர்களின் கேள்விக்கும் பதில் அளித்தார். குறைகள் உள்ள பகுதிகளுக்கு நேரடியாக ஆய்வு செய்ய வருவதாகவும் கூறினார்.

ஒருங்கிணைப்பு

நான்கு மண்டல தலைவர்கள் மற்றும் இரண்டு கவுன்சிலர்கள் வீதம் மொத்தம் 12 பேர் அடங்கிய ஒருங்கிணைப்பு குழு கவுன்சிலர்களால் ஏற்படுத்தப்பட்டுள்ளது. வார்டு தோறும் நடக்க வேண்டிய பணிகளை ஒருங்கிணைத்து அதிகாரிகளின் கவனத்துக்கு கொண்டு செல்லப்படும் என தெரிவித்தனர். நகரமைப்பு குழு உள்ளிட்ட மாநகராட்சியின் குழுக்களுக்கு இனி முக்கியத்துவம் தரப்படும் எனவும் கமிஷனர் உறுதியளித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை