நெல்லையில் சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., 2வது நாளாக ஆய்வு
திருநெல்வேலி:தென் மாவட்ட சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஸ்டேஷன்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகளின் விசாரணை குறித்து நெல்லையில் 2வது நாளாக சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., முத்தரசி ஆய்வு நடத்தினார்.சென்னையில் இருந்து சி.பி.சி.ஐ.டி., எஸ்.பி., முத்தரசி நேற்றுமுன்தினம் நெல்லைக்கு வந்தார். நெல்லை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் அவர் பல்வேறு வழக்குகளின் விசாரணை குறித்து ஆய்வு செய்தார்.நெல்லை கிழக்கு மாவட்ட காங்., தலைவர் ஜெயக்குமார் கொலை வழக்கில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட விசாரணை, முக்கிய ஆதாரங்கள், சாட்சியங்கள், சி.சி.டி.வி., கேமராப்பதிவுகள், முக்கிய நபர்கள் அளித்த வாக்குமூலங்கள், இதர ஆவணங்களை அவர் ஆய்வு செய்தார். டி.எஸ்.பி., ராஜ்குமார் நவ்ரோஜ், இன்ஸ்பெக்டர் உலகராணி, இதர அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். இந்த வழக்கில் மேற்கொள்ள வேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தினார்.நேற்று 2வது நாளாக நெல்லை சி.பி.சி.ஐ.டி., அலுவலகத்தில் எஸ்.பி., முத்தரசி ஆய்வு மேற்கொண்டார். தென் மாவட்டங்களில் சி.பி.சி.ஐ.டி.,யின் பல்வேறு பிரிவு ஸ்டேஷன்களில் புலன் விசாரணையில் உள்ள வழக்குகள், அவற்றில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்வது, கோர்ட்டில் வழக்கு விசாரணையை துரிதப்படுத்துவது குறித்து அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். பின்னர் ஆய்வுக்கூட்டத்தை முடித்து விட்டு அவர் சென்னைக்கு புறப்பட்டார்.