| ADDED : டிச 28, 2025 04:14 AM
திருநெல்வேலி: திருநெல்வேலி தீயணைப்பு துறை துணை இயக்குனர் சரவணபாபுவை, லஞ்ச ஒழிப்பு போலீசில் சிக்க வைக்க, தீயணைப்பு துறையினரே அவரது அலுவலகத்தில் நவ., 17ம் தேதி பணம் வைத்தனர். இந்த விவகாரம் 'சிசிடிவி' காட்சிகள் மூலம் வெளிச்சத்திற்கு வர, பெருமாள்புரம் போலீசார், அதிகாரியை சிக்க வைக்க சதி செய்த, தீயணைப்புத்துறை வீரர்கள் ஆனந்த், மூர்த்தி, முருகேஷ் மற்றும் பணம் வைத்த நபர் விஜய், உதவிய முத்து சுடலை ஆகியோரை கைது செய்தனர். இதில், முக்கிய குற்றவாளியாக, திருப்பூர் தீயணைப்பு அலுவலர் வீரராஜ் தேடப்படுகிறார். அவரை விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆஜராகவில்லை. அவரது முன்ஜாமின் மனுவும் தள்ளுபடியானது. இந்நிலையில், சம்பவம் நடந்த போது தொடர்புடைய நபர்களுடன் அடிக்கடி மொபைல் போனில் பேசிய துாத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கணேசன், சென்னை எழும்பூர் தீயணைப்பு அலுவலர் மோரீஸ், கோவை உதவி மாவட்ட தீயணைப்பு அலுவலர் அழகர்சாமி ஆகியோர் இன்று பெருமாள்புரம் ஸ்டேஷனில் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.