உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்: இளம் பெண்ணிடம் விசாரணை?

நெல்லை ஜெயக்குமார் மர்ம மரணம்: இளம் பெண்ணிடம் விசாரணை?

திருநெல்வேலி: திருநெல்வேலி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் தனசிங், மர்ம மரணம் தொடர்பாக இளம்பெண் ஒருவரிடம் விசாரணை நடந்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கூறப்படுவதாவது: போலீசாரால் விசாரணை நடத்தப்படும் இளம்பெண் ஜெயக்குமாருக்கு நன்கு அறிமுகமானவர். அவரை ஓரிரு முறை ஜெயக்குமார் தனது வீட்டிற்கு அழைத்து வந்துள்ளார். இதனால், வீட்டில் பிரச்னை எழுந்தது. அந்த பெண்ணிடம் 2 நாட்களாக விசாரணை நடந்து வருகிறது. இவ்வாறு அந்த தகவலில் கூறப்பட்டு உள்ளது.

கையெழுத்தில் குழப்பம்

இதனிடையே, ஜெயக்குமார் தனசிங்கின் கையெழுத்தில் குழப்பம் ஏற்பட்டு உள்ளது. மரண வாக்குமூலம் என்ற பெயரில் ஒரு கடிதமும், குடும்பத்தினருக்க என மற்றொரு கடிதமும் ஜெயக்குமார் தனசிங் பெயரில் வெளியாகின. இந்நிலையில் மற்றொரு கடிதமும் வெளியாகி உள்ளது. இதில் உள்ள கையெழுத்துகள் வெவ்வேறாக உள்ளது. இதனிடையே கடந்த மார்ச் மாதம் ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்டு போலீசுக்கு ஜெயக்குமார் தனசிங் கடிதம் எழுதியிருந்தார். அதிலும் கையெழுத்து வேறாக உள்ளது. இதனால், அதில் எது அவரின் உண்மையான கையெழுத்து என்பதை உறுதி செய்ய முடியாமல் போலீசார் உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

உறுதி

இதனிடையே, ஜெயகுமார் தனசிங், கூலிப்படையினரால் கொல்லப்பட்டு, பின் அவரது உடல் எரிக்கப்பட்டுள்ள தகவல் வெளியாகி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கை அடிப்படையில், இதை உறுதி செய்துள்ள போலீசார், அடுத்தகட்ட விசாரணையை துரிதப்படுத்தி உள்ளனர்.நெல்லை மாவட்ட சிறப்பு படை போலீஸ் அதிகாரிகள் கூறியதாவது: ஜெயகுமார் இறப்பதற்கு சில நாட்களுக்கு முன் எழுதிய இரு கடிதங்களும், அவர் மரண பயத்தில் இருந்ததை வெளிப்படுத்துகின்றன. கடிதத்தில் முழுக்க முழுக்க தனக்கு பிறர் அளிக்க வேண்டிய தொகை குறித்து குறிப்பிட்டுள்ளதுடன், அதையெல்லாம் கட்டாயம் வசூலித்தாக வேண்டும் என்று சொல்லி இருக்கிறாரே தவிர, அவர் யார் யாரிடம் எல்லாம் கடன் வாங்கினார். அப்படி வாங்கிய கடனில் திருப்பி செலுத்தப்பட்டது எவ்வளவு; செலுத்தப்பட வேண்டியது எவ்வளவு என்பது குறித்தெல்லாம், ஒரு இடத்தில் கூட கோடிட்டு காட்டவில்லை. விசாரணையில், அவர் ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல நகரங்களில், வட்டிக்கு பணம் கொடுத்து வாங்குவோரிடம் இருந்து, 40 கோடி ரூபாய் வரை கடன் பெற்றிருக்கிறார். அந்தக் கடனை அவர் முறையாக திருப்பி செலுத்தவில்லை.அவரை வெளியுலகிற்கு அரசியல் பிரமுகராகவே தெரியும். அதைக்கடந்து, ரியல் எஸ்டேட் தொழிலில் கொடிகட்டிப் பறந்துள்ளார். பல கோடி ரூபாயை, ரியல் எஸ்டேட் வாயிலாக அனாயசமாக சம்பாதித்தவர், ஒப்பந்தப் பணிகள் எடுத்து செய்பவராகவும் இருந்துள்ளார். இதற்காகவே நிறைய கடன் வாங்கியதாகவும் தெரிகிறது. துவக்கத்தில் என்ன ஏதென்று புரியாமல் தான் விசாரணையை துவக்கினோம். அடுத்தடுத்த கட்டங்களில், அவருடைய மொபைல் போனை ஆய்வு செய்தோம். அதில், யாரிடம் இருந்தெல்லாம் அவருக்கு எந்த சமயங்களில் அழைப்புகள் வந்துள்ளன என்பதை பார்த்தோம்.ஜெயகுமாருக்கு கடன் கொடுத்தவர்களே, அவரை அதிகம் தொடர்பு கொண்டு பேசியிருப்பது தெரிந்தது. பின், ரகசியமாக அவர்களை பற்றி விசாரித்த போது, ஜெயகுமார் குறித்த முழு விபரங்களும் தெரிய வந்திருக்கின்றன. பணம் பெற்று பலருக்கு திருப்பி கொடுக்காமல் இருந்ததை தொடர்ந்து, அவர்கள் பணத்தை கேட்டபோது, தனக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கை வைத்து எதுவும் செய்ய முடியும் என்று மிரட்டி உள்ளார். இதையடுத்து, பணம் கொடுத்தவர்களில் பலரும் ஜெயகுமாரை, கூலிப்படையை ஏவி மிரட்டச் சொல்லி உள்ளனர். அதற்கெல்லாம் ஜெயகுமார் கொஞ்சமும் அசைந்து கொடுக்கவில்லை. அதன்பின்னரே, அவரை கூலிப்படை வாயிலாக, யாரோ கொலை செய்திருக்க வேண்டும் என்று தெரிகிறது. கூலிப்படையை ஏவியவர் யார் என்ற கோணத்தில், இப்போது விசாரணை தொடருகிறது.ஒவ்வொரு கூலிப்படைக்கும் கொலை செய்வதில் ஒவ்வொரு ஸ்டைல் உண்டு. அந்த வகையில், ஜெயகுமார் காலை ஒயரால் கட்டி கொலை செய்து, அதன் பின் எரித்துள்ளனர். இப்படிப்பட்ட கொலை செய்யக் கூடிய கூலிப்படையினர், மதுரை மற்றும் புறநகர் பகுதிகளில் உண்டு. அவர்களில் யாரோ ஒரு தரப்பு தான் கொலை செய்திருக்கு முடியும். ஜெயகுமாரை பொறுத்தவரை தற்கொலை செய்திருக்க வாய்ப்பில்லை என்ற முடிவுக்கு எப்படி வந்திருக்கிறோம். அவரது உடல் எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. தற்கொலை செய்வதற்காக தீக்குளித்திருந்தால், கால் பாதம் எரிந்திருக்க வாய்ப்பில்லை.அதோடு, அங்கிருந்த ஓலைகள் எரிந்ததில் புகையையும், சாம்பலையும் அவர் சுவாசித்திருப்பார். அதெல்லாம் அவருடைய நுரையீரலில் படிந்திருக்கும். 'போஸ்ட்மார்ட்டம்' அறிக்கையில் அப்படி எதுவுமே தென்படவில்லை. அதனால், கொலை செய்யப்பட்டுத்தான் எரியூட்டப்பட்டிருக்க வேண்டும். அதை ஊர்ஜிதம் செய்யப்பட்டதோடு, எந்தக் கூலிப்படையினர் இந்த வேலையை செய்தனர் என்பதை அறிய, பல வகைகளிலும் விசாரணை தொடருகிறது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

R Kay
மே 09, 2024 01:11

Scotland Yard- க்கே சவால் விடுமளவு திறமை மிக்க HMV தமிழக காவல்துறை எப்படியும் வேண்டிய முடிவை கண்டுபிடித்துவிடும் என்பதில் ஐயமில்லை


rama adhavan
மே 08, 2024 20:25

அறுபது, அறுபத்து ஐந்து ஆண்டுகளுக்கு முன் ஒரு தென் மாவட்டத்தில் டாக்டர் மரகதவேல், அவரது மனைவி கொடூரமாக கொல்லப்பட்டனர் பெயர் சரி என நினைக்கிறேன் சிக்கலான கொலை இறுதியில் ஆண்டி, கொம்பன் என இருவரை பிடித்து தூக்கிட்டதாக நினைவு அது போல் இதுவும் ஆகுமோ?


அசோகன்
மே 08, 2024 16:26

கேசை எப்புடி திருப்பினோம் பாத்தீங்களா....... இதுவும் கொஞ்சநாள்தான் அப்புறமே ஜெயக்குமாரை கொலை செய்தது அதே ஜெயக்குமார்த்தான் னு கேசை முடிச்சிபுடுவோம் ????.... திராவிட ஆட்சியா கொக்கா


Kasimani Baskaran
மே 08, 2024 15:29

ஒரு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் நபரை பத்திரமாக ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்துக்கு கொண்டு செல்ல முடியாத ஒரு துறை குற்றவாளியை கண்டு பிடித்துவிடும் என்பது கற்பனையில்த்தான் சாத்தியம் அதை தங்க பந்துதான் ஏற்கனவே கோடிட்டு காட்டி விட்டாரே யாரிடமும் கடன் வாங்கவில்லை என்று ஆக செத்தவனால் வந்து சாட்சி சொல்ல முடியாது என்ற நம்பிக்கையில் பலர் விளையாடுகிறார்கள்


NANDAKUMAR
மே 08, 2024 15:23

Screenplay is set Young lady entered in to the Scene So, what is next ??


Palanisamy Sekar
மே 08, 2024 14:38

எந்த கொம்பனாலும் குறை சொல்லவே முடியாத ஆட்சியை கொடுத்துவருகின்ற இந்த திராவிடமாடல் ஆட்சிக்கு இது ஒரு மகுடம் தான் சட்டமன்ற தேர்தலில் இதனை சொல்லிக்கூட வாக்குகேட்கலாம் இந்த திமுக கூலிப்படை எனபதே கேவலம் அதுவும் ஒவ்வொரு கூலிப்படைக்கும் ஒவ்வோர் ஸ்டைல் என்கிறது போலீஸ் தகவல் சபாஷ் இப்படித்தான் கூலிப்படையை வளர்த்துவிடணும் திருச்சி ராமஜெயம் கொலையை போலவே கம்பியைக்கட்டி கொன்றுள்ளார்கள் என்ன மனோதைரியம் இது எப்படி இவர்களை வளரவிட்டு வேடிக்கைபார்க்கின்றது போலீஸ்? கேட்பார் இல்லையோ? இதே சாமான்யனாக இருந்திருப்பின், இந்நேரம் கேஸ் குளோஸ் ஆகியிருக்கும் கூலிப்படையிடம் கோல்மால் நடந்திருக்கும்


ponssasi
மே 08, 2024 14:20

ஜெயக்குமார் குறிப்பிட்டுள்ள நபர்கள் எல்லாம் செல்வாக்கு மிகுந்தவர்கள் இனி ஜெயக்குமாரின் செல்வாக்கை எவ்வளவு சிதைக்கமுடியுமோ அவ்வளவையும் செய்யஆரம்பித்துவிட்டனர் ஜெயக்குமார் மீது கஞ்சா கேஸ் கூட இருந்தது என்பார்கள் இவளவு மோசமானவரா ஜெயக்குமார் எனும் நிலைக்கு ஜெயக்குமார் குடும்பத்தை இழிவுபடுத்தி இந்த கேஸ் ஒன்றும் இல்லாமல் போகும்


Anand
மே 08, 2024 13:16

ரூபி மனோகரன், தங்கபாலு, பெயர்கள் எழுதியுள்ளார் என செய்திகள் வந்தனவே, இப்போ கதை திசை மாறி வேற மாதிரி போகிறது, எல்லாம் அந்த ஆண்டவனுக்கே வெளிச்சம்


மேலும் செய்திகள்





புதிய வீடியோ