ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி ரூ.53 லட்சம் மோசடி
திருநெல்வேலி: வேளாண் துறையின் ஓய்வு பெற்ற அதிகாரியை மிரட்டி, 53 லட்சம் ரூபாய் மோசடி செய்தவர்கள் பற்றி போலீசார் விசாரிக்கின்றனர். திருநெல்வேலி மாவட்டம், வடக்கன்குளத்தை சேர்ந்தவர் சேவியர், 80; கால்நடைத்துறையில் இயக்குனராக பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவரது, 'வாட்ஸாப்'பிற்கு செப்., 10ல் பெங்களூரு, காந்திநகரில் இருந்து சி.பி.ஐ., அதிகாரி மதன்குமார் என்ற பெயரில் ஒருவர் தொடர்பு கொண்டார். அவர், சேவியரின் ஆதார் எண்ணை பயன்படுத்தி சிலர் தேச விரோத செயல், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டிருப்பதாகவும், அந்த வழக்கில் சேவியர் பெயர் இருப்பதால் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படலாம் எனவும் மிரட்டினார். சேவியரை டிஜிட்டல் கைது செய்வதாகவும் கூறினார். இதிலிருந்து தப்பிக்க, அவரது வங்கி கணக்கில் உள்ள பணம் முழுதையும் தாங்கள் கூறும் வங்கி கணக்கிற்கு மாற்றும்படி கூறினார். அதன்படி, செப்., 12ல், 51 லட்சம் ரூபாயை, அவர் கூறிய பெங்களூரு, கோரமங்களாவில் உள்ள வங்கி கிளையில் எஸ்.பி.எஸ்.ஜி குளோபல் கம்பேஷன் என்டர்பிரைசஸ் கணக்கிற்கு, சேவியர் அனுப்பினார். செப்., 15ல் திண்டிவனத்தில் உள்ள வங்கியில் ஹென்றி ஜோன்ஸ் என்பவரது கணக்கிற்கு 2 லட்சம் ரூபாயை அனுப்பினார். ஆனால், அதன் பின் அவர்கள் பேசிய மொபைல் போன் எண்களில் தொடர்பு கொண்டால் பதில் இல்லை. ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர், சம்பவம் குறித்து திருநெல்வேலி மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் செய்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.