உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருநெல்வேலி / நான்குநேரி டோல்கேட்டை புறக்கணித்தாலும் "பணவசூல் மாற்றுப்பாதையில் செல்லும் வாகன டிரைவர்கள் கொதிப்பு

நான்குநேரி டோல்கேட்டை புறக்கணித்தாலும் "பணவசூல் மாற்றுப்பாதையில் செல்லும் வாகன டிரைவர்கள் கொதிப்பு

திருநெல்வேலி : நான்குநேரி டோல்கேட்டை புறக்கணித்து விட்டு மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்களை வழிமறித்து சிலர் பணம் வசூலிப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. நெல்லை - நாகர்கோவில் வழித்தடத்தில் தங்க நாற்கர சாலை அமைப்புப்பணிகள் நிறைவு பெற்றுள்ளது. நான்குநேரி அருகே டோல்கேட் அமைத்து ரோட்டில் செல்லும் கார்கள், லாரிகள், பிற வாகன டிரைவர்களிடம் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு முறைப்படி ரசீது வழங்கப்படுகிறது. நெல்லையில் இருந்து நாகர்கோவிலுக்கு அடிக்கடி செல்லும் சில வாகன டிரைவர்கள் டோல்கேட் கட்டண வசூலில் இருந்து தப்பிக்க நான்குநேரி சப்-ஸ்டேஷன் அருகே ரோட்டை விட்டு இறங்கி சில கி.மீ., தூரம் சென்று டோல்கேட்டை கடந்து மீண்டும் மெயின்ரோட்டில் ஏறி சென்று வருகின்றனர்.

டோல்கேட்டை புறக்கணித்துவிட்டு மாற்றுப்பாதையில் செல்லும் வாகனங்களை மலையான்குளம் விலக்கு பகுதியில் சிலர் வழிமறித்து பணம் கேட்கின்றனர். பணம் தர மறுப்பவர்களிடம் அவர்கள் தகராறு செய்கின்றனர். இதற்கு பயந்து பல டிரைவர்கள் பணத்தை அளித்துவிட்டு செல்கின்றனர். 'மெயின் ரோட்டில் இரு தடவைகள் செல்ல கட்டணம் செலுத்துவதை விட ஒருமுறை இங்கு பணம் அளியுங்கள்' என பேரம் பேசி சிலர் பணவசூலில் ஈடுபடுகின்றனர். இதனால் வாகன டிரைவர்கள் கொதிப்படைந்துள்ளனர். சில நாட்களுக்கு முன் மாற்றுப்பாதையில் காரில் சென்ற பாளை. யை சேர்ந்த நபரை மலையான்குளம் விலக்கு அருகே மூவர் மறித்து பணம் கேட்டனர். பணம் தரமறுத்த அவரிடம் மூவரும் தகராறு செய்தனர். இதுகுறித்து பாளை. நபர் கூறும்போது, ''மாற்றுப்பாதையில் வாகனங்களில் செல்பவர்களிடம் டோல்கேட் கட்டணம் வசூலிக்க சட்டத்தில் இடம் உள்ளதா என தெரியவில்லை. மலையான்குளம் விலக்கு அருகே என் காரை வழிமறித்து கட்டணம் கேட்டனர். 'மலையான்குளம் டோல்கேட்' என்ற பெயரில் ரசீது தந்தால் பணம் தருவேன் என கூறினேன். அவர்கள் ரசீது தரவில்லை. பணம் வசூலிப்பவர்கள் டோல்கேட் நபர்களா, சுற்றுப்பகுதி கிராமத்தை சேர்ந்த மோசடி நபர்களா என தெரியவில்லை.'' என்றார்.

பண வசூல் இல்லை : இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணைய அதிகாரி ஒருவரிடம் கேட்ட போது, ''மெயின் ரோட்டில் செல்பவர்கள் வேண்டுமென்றே சில கி.மீ., தூரம் சுற்றி டோல்கேட்டை புறக்கணித்துவிட்டு கட்டணம் செலுத்தாமல் செல்வதை ஏற்க முடியாது. மெயின் ரோட்டில் செல்பவர்கள் முறைப்படி கட்டணம் செலுத்த வேண்டும். இப்படி அனைவரும் சென்றால் டோல்கேட் கட்டண வசூல் பாதிக்கப்படும். தற்போது மாற்றுப்பாதையில் செல்லும் மணல் லாரிகள், உள்ளூர் வாகன டிரைவர்கள் டோல்கேட் வழியே செல்லும்படி அறிவுறுத்தப்படுகின்றனர். எனினும் மாற்றுப்பாதையில் செல்லும் பெரும்பாலான வாகன டிரைவர்களிடம் டோல்கேட் கட்டணம் வசூலிப்பதில்லை. டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்பட்டால் கண்டிப்பாக ரசீது வழங்கப்படும்'' என்றார். 'டோல்கேட்' கட்டணம் என கூறி டிரைவர்களிடம் முறையற்ற பணவசூல் நடக்கிறதா என சம்பந்தப்பட்டவர்கள் கண்டறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை