கருத்தடைக்காக பிடிக்கப்பட்ட இரு நாய்கள் உணவின்றி சாவு
திருநெல்வேலி, : திருநெல்வேலி மாநகராட்சியில் சுற்றித்திரியும் நாய்களுக்கு, கருத்தடை செய்வதற்காக மாநகராட்சி நிர்வாகம், நாகர்கோவிலை சேர்ந்த ஜீவகாருண்யா என்ற தனியார் தொண்டு நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இதற்காக, மேலப்பாளையம் மாட்டுச்சந்தை அருகே தகர கொட்டகையில் மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.சில தினங்களுக்கு முன், கருத்தடை செய்வதற்காக பிடிக்கப்பட்ட, 20க்கும் மேற்பட்ட நாய்கள், அந்த கொட்டகையில் அடைக்கப்பட்டிருந்தன. அங்கு, நாய்களுக்கு குடிநீர், உணவு வழங்காமல், இரு ஆண் நாய்கள் இறந்தன. உடல் அழுகி துர்நாற்றம் வீசியது. பொதுமக்கள் புகாரில், மாநகராட்சி சுகாதார அலுவலர் டாக்டர் ராணி, நேற்று சோதனை மேற்கொண்டார்.கொட்டகையில் இருந்த நாய்கள் விடுவிக்கப்பட்டன. இறந்த இரு நாய்களின் உடல்களுக்கு, பிரேத பரிசோதனை நடத்த உத்தரவிடப்பட்டது.மாநகராட்சி அலுவலர் கூறுகையில், 'தெருவில் சுற்றித்திரியும் நாய்களை பிடித்து கருத்தடை செய்து, மூன்று நாட்கள் உணவளித்து பராமரிக்க வேண்டும். பின், அவற்றை பிடித்த இடத்தில் விட வேண்டும் என்பது ஒப்பந்தம். ஒரு நாய்க்கு, 1,600 ரூபாய் மாநகராட்சியால் வழங்கப்படுகிறது. நாய்கள் இறந்து, துர்நாற்றம் வீசியும் கூட கவனிக்காமல் இருந்துள்ளனர். கடும் நடவடிக்கை எடுக்கப்படும்' என்றார்.