திருவள்ளூர், திருவள்ளூர் லோக்சபா தொகுதியில் பதிவான மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரம் பெருமாள்பட்டு தனியார் பள்ளியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் கலெக்டர் பிரபுசங்கர் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.பின் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:ஓட்டு எண்ணப்பட உள்ள மையத்திற்குள், உதவியாளர், தேர்தல் ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட நபர், தேர்தல் பணியில் உள்ள அரசு ஊழியர், வேட்பாளர், வேட்பாளர்களின் முகவர் மற்றும் ஓட்டு எண்ணும் முகவர் ஆகியோர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்.அனைத்து அலுவலர்களும் கண்டிப்பாக அடையாள அட்டை அணிந்திருக்க வேண்டும். சட்டசபை வாரியாக ஓட்டு எண்ணும் மையத்தில், ஓட்டுகள் எண்ணுவதற்காக 14 மேஜைகள் அமைக்கப்பட்டிருக்கும். உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களுக்கு தனியாக ஒரு மேஜை அமைக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு மேஜைக்கும் ஓட்டுகள் எண்ணும் மேற்பார்வையாளர் ஒருவர், உதவியாளர், 'மைக்ரோ அப்சர்வர்' ஒருவர் மற்றும் கட்டுப்பாட்டு கருவியை பாதுகாப்பு அறையிலிருந்து கொண்டு வந்து மேற்பார்வையாளரிடம் அளிக்க ஒவ்வொரு மேஜைக்கும் ஒரு கிராம உதவியாளர் நியமனம் செய்யப்பட்டிருப்பர்.ஓட்டு எண்ணும் பணிக்காக நியமனம் செய்யப்பட்டுள்ள அலுவலர்கள், வரும் ஜூன் 4ம் தேதி காலை 5:00 மணிக்கு ஓட்டு எண்ணும் மையமான பெருமாள்பட்டு, ஸ்ரீராம் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி வளாகத்தில் ஆஜராக வேண்டும்.கணினி சுழற்சி முறையில் ஓட்டு எண்ணும் அலுவலர்களுக்கான சட்டசபை தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அவர்களுக்கு சம்பந்தப்பட்ட உதவி தேர்தல் அலுவலர் - தாசில்தார் வாயிலாக பணி நியமன ஆணை வழங்கப்படும்.பணி நியமன ஆணை பெற்றுக் கொண்ட மேற்பார்வையாளர், உதவியாளர் மற்றும் 'மைக்ரோ அப்சர்வர்' ஆகியோர் தங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள சட்டசபை தொகுதிக்குரிய ஓட்டு எண்னும் மையத்தில் குறிப்பிடப்பட்ட மேஜைக்கு செல்ல வேண்டும்.அதன்பின், ஓட்டு எண்ணும் பணிக்கான எழுது பொருட்கள் மற்றும் மற்றும் உபகரணங்களான பேனா, கால்குலேட்டர், எழுதும் அட்டை, பேப்பர் உள்ளிட்ட இதர பொருட்கள் உள்ளதை சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.இதுதொடர்பாக அனைத்து அலுவலர்களுக்கும் பணி விபர உத்தரவு வழங்கப்பட்டுள்ளது. ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் வேட்பாளர்/முகவர், பொது தேர்தல் பார்வையாளர், தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ஆகியோர் முன்னிலையில் திறக்கப்படும்.காலை 8:00 மணியளவில் தபால் ஓட்டுகள் எண்ணப்படும். அதன்பின், அரை மணி நேரம் கழித்து, மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் பதிவான ஓட்டு எண்ணிக்கை ஆரம்பிக்கப்படும். ஒவ்வொரு ஓட்டுச் சாவடியில் பதிவான ஓட்டுகள் எண்ணப்பட்டு, அதன் முடிவுகள் அறிவிக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.நிகழ்ச்சியில், மாவட்ட வருவாய் அலுவலர் ராஜ்குமார், கலெக்டரின் நேர்முக உதவியாளர் - தேர்தல் சத்யபிரசாத் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.