1,600 மெகா வாட் மின்சாரம் கையாள மத்திய அரசின் அனுமதிக்கு எதிர்பார்ப்பு
சென்னை:சென்னை மற்றும் புறநகரில் மின் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மின் வாரியம், 400 கிலோ வோல்ட் திறன் உடைய மின்சாரத்தை மின் கோபுர வழித்தடம் வாயிலாக எடுத்து செல்கிறது. சென்னைக்கு கூடுதல் மின்சாரம் எடுத்து வர வேண்டிய சூழலில், மின் கோபுர வழித்தடம் அமைக்க இட வசதி இல்லை.எனவே, அதிக திறன் மின் வழித்தடங்களில் இருந்து அதிக மின்சாரத்தை சென்னைக்கு எடுத்து வர தரைக்கு அடியில், 400 கி.வோ., திறனில் கேபிள் வழித்தடம் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள், 2020 மே துவங்கின.மூன்று வழித்தடங்களில் இப்பணிகள் மேற்கொள்ளும் மொத்த செலவு, 1,100 கோடி ரூபாய். ஒப்பந்தப்படி அனைத்து பணிகளையும் ஒப்பந்த நிறுவனங்கள், 2023 டிசம்பரில் முடித்திருக்க வேண்டும். 'கொரோனா' ஊரடங்கு உள்ளிட்ட காரணங்களால் வழித்தட பணிகளில் தாமதம் ஏற்பட்டது.தற்போது, மஞ்சம்பாக்கம் - கொரட்டூர், ஒட்டியம்பாக்கம் - கிண்டி ஆகிய இரு வழித்தட பணிகள் முடிவடைந்த நிலையில், மின்சாரத்தை செலுத்தி அனைத்து சோதனைகளும் நிறைவடைந்து உள்ளன. இந்த வழித்தடத்தில், 1,600 மெகா வாட் மின்சாரத்தை கையாள, மத்திய அரசின் அனுமதியை எதிர்பார்த்து, மின் வாரியம் காத்திருக்கிறது.இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:சென்னைக்கு, மூன்று வழித்தடங்கள் வாயிலாக தலா, 800 மெகா வாட் என, மொத்தம், 2,400 மெகா வாட் மின்சாரம் கூடுதலாக கையாள முடியும். அதிக திறன் என்பதால், 400 கி.வோ., வழித்தடத்தில் மின்சாரம் எடுத்து செல்ல, மத்திய மின் துறையிடம் அனுமதி பெற வேண்டும். இதற்கு அனுமதி கேட்டு மூன்று மாதங்கள் மேல் ஆகிறது. அனுமதி கிடைத்ததும் இரு வழித்தடங்களிலும், 1,600 மெகா வாட் மின்சாரம் எடுத்து செல்லும் பணி துவங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார். 'மெட்ரோ'வால் தாமதம்பாரிவாக்கம் - கிண்டி வழித்தடத்தில், போரூரில் மெட்ரோ ரயில் வழித்தடம் அமைக்கும் பணி நடக்கிறது. அந்த வழித்தடத்தில் கேபிள் அமைக்கும் பணிக்கு, மெட்ரோ ரயில் நிர்வாகம் அனுமதி தர வேண்டும். இந்த அனுமதி கிடைப்பதில் தாமதம் ஏற்படுகிறது.இதனால், மூன்று வழித்தட பணிகளும், ஒரே சமயத்தில் துவங்கிய நிலையில் அதற்கு ஏற்ப முடிவடைந்திருக்க வேண்டும். ஆனால், பாரிவாக்கம் - கிண்டி வழித்தடத்தில், 10 கி.மீ., பணிகளே முடிவடைந்துள்ளது. இந்த பணிகளை, 2025 பிப்ரவரிக்குள் முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது.
3 வழித்தடங்கள்
1. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள ஒட்டியம்பாக்கம், 400 கி.வோ., துணை மின் நிலையத்தில் இருந்து, கிண்டி, 400 கி.வோ., துணை மின் நிலையம் இடையில், 9 கி.மீ., கேபிள் வழித்தடம்2. திருவள்ளூர், அலமாதி - காஞ்சிபுரம் சுங்குவார்சத்திரம், 400 கி.வோ., வழித்தடத்தில் வெள்ளவேடு அருகில் உள்ள பாரிவாக்கத்தில் இருந்து கிண்டி இடையில், 16.50 கி.மீ., கேபிள் வழித்தடம் 3. திருவள்ளூர், மணலி - கொரட்டூர், 400 கி.வோ., வழித்தடத்தில் மஞ்சம்பாக்கம் - கொரட்டூர் இடையில், 12 கி.மீ., கேபிள் வழித்தடம்