உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / புதரில் மாயமான அணைக்கட்டு கால்வாய் காட்டூர் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல்

புதரில் மாயமான அணைக்கட்டு கால்வாய் காட்டூர் ஏரிக்கு மழைநீர் செல்வதில் சிக்கல்

பொன்னேரி: பொன்னேரி அடுத்த லட்சுமிபுரம் கிராமத்தில் ஆரணி ஆற்றின் குறுக்கே அணைக்கட்டு உள்ளது. இங்கு, மழைக்காலங்களில் தேக்கி வைக்கப்படும் மழைநீர், பெரும்பேடு ஏரி மற்றும் காட்டூர், தத்தமஞ்சி ஏரிகளில் அமைக்கப்பட்டுள்ள நீர்த்தேக்கம் ஆகியவற்றிற்கு கொண்டு சென்று சேமித்து வைக்கப்படுகிறது.இதற்காக, அணைக்கட்டு நிரம்பியதும், இருபுறமும் உள்ள ஷட்டர்கள் திறக்கப்பட்டு, கால்வாய்கள் வழியாக மழைநீர் வெளியேற்றப்படுகிறது.இந்நிலையில், இந்த மழைநீர் செல்லும் கால்வாய்கள் முழுதும் முள்செடிகள் சூழ்ந்தும், புதர் மண்டியும் பராமரிப்பு இன்றி உள்ளன.இதனால், மழைக்காலங்களில் அணைக்கட்டில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர், பெரும்பேடு ஏரி மற்றும் காட்டூர், தத்தமஞ்சி நீர்த்தேக்கத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.விவசாயம் மற்றும் குடிநீர் தேவைக்காக ஏரி மற்றும் நீர்த்தேக்கத்தில் எதிர்பார்க்கும் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலையும் உள்ளது. வடகிழக்கு பருவ மழை துவங்க உள்ள நிலையில், அணைக்கட்டில் இருந்து ஏரி மற்றும் நீர்த்தேக்கத்திற்கு செல்லும் கால்வாய்களை துார்வாரி, சீரமைக்க வேண்டும் என, விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பராமரிப்பு மோசம்

பொன்னேரி அடுத்த கம்மார்பாளையம் கிராமத்தில் இருந்து பேட்டை கிராமம் வரை விவசாய நிலங்கள் இடையே செல்லும் மழைநீர் கால்வாய் குறுக்கே உள்ள தடுப்பணை பராமரிப்பு இன்றி கிடக்கிறதுமழைக்காலங்களில் விவசாய நிலங்களில் இருந்து வெளியேற்றப்படும் மழைநீர் தடுப்பணையில் தேக்கி சேமித்து வைக்கப்படுகிறது. நிலத்தடி நீரை பாதுகாக்கும் வகையில் இது அமைக்கப்பட்டது.தற்போது தடுப்பணை பகுதியிலும், அதன் கான்கிரீட் கட்டுமானங்களிலும், மரங்கள் வளர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் உள்ளன. இதனால் மழைக்காலங்களில் தடுப்பணையில் மழைநீரை சேமித்து வைக்க முடியாத நிலை உள்ளது.நுாறுநாள் வேலை திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட இந்த தடுப்பணை தொடர் பராமரிப்பு இன்றி கிடப்பதால் விவசாயிகள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.நிலத்தடி நீர் பாதுகாக்கவும், மழைநீர் சேமித்து வைக்கவும் அரசு பல்வேறு திட்டங்களை கொண்டு வந்து அதற்காக பல லட்சம் ரூபாய் செலவிட்டு வரும் நிலையில், அதிகாரிகளின் கண்காணிப்பு இல்லாமல் இதுபோன்ற திட்டங்கள் முடங்கி கிடப்பதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.மேற்கண்ட கிராமத்தில் பராமரிப்பு இன்றி கிடக்கும் தடுப்பணையை உடனடியாக சீரமைக்க மீஞ்சூர் ஒன்றிய நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை