வட்டாட்சியர் அலுவலகம் அருகே பேருந்து நிற்க நடவடிக்கை
ஆர்.கே.பேட்டை: ஆர்.கே.பேட்டையில் இருந்து சோளிங்கர் செல்லும் சாலையில், வெள்ளாத்துார் கூட்டு சாலையில், ஆர்.கே.பேட்டை காவல் நிலையம், வட்டார வளர்ச்சி அலுவலகம், வட்டாட்சியர் அலுவலகம், தொழிற்பேட்டை உள்ளிட்டவை செயல்பட்டு வருகின்றன. ஒன்றியத்தின் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பகுதியில் உள்ள பேருந்து நிறுத்தத்தில் அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல வேண்டும் என பகுதிவாசிகள் மற்றும் சமூகஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இது தொடர்பாக, கடந்த மாதம் நடந்த வெள்ளாத்துார் ஊராட்சி கிராம சபை கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதையடுத்து, நேற்று முதல் ஆர்.கே.பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் எதிரே அனைத்து பேருந்துகளும் நின்று செல்ல போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். இதனால், பகுதிவாசிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.