பொன்னேரி, ஆரணி ஆற்றில் கரை உடைப்புகளை தவிர்க்க, கான்கிரீட் தடுப்பு சுவர் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வடகிழக்கு பருவ மழை துவங்குவதற்குள், பணிகளை முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.ஆந்திர மாநிலத்தில் உருவாகும் ஆரணி ஆறு, தமிழக பகுதியான திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, புதுவாயல், பொன்னேரி, தத்தமஞ்சி வழியாக, 127 கி.மீ., பயணித்து, பழவேற்காடு கடலில் முடிகிறது.ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் நேரங்களில், பலவீனமாக உள்ள கரைகள் உடைப்பு ஏற்படுவது வழக்கமாக உள்ளது. கடந்த காலங்களில், பெரும்பேடுகுப்பம், ரெட்டிப்பாளையம், தத்தமஞ்சி, சோமஞ்சேரி, பிரளயம்பாக்கம் என, பல்வேறு பகுதிகளில் கரை உடைப்பு ஏற்பட்டு, ஆற்று நீர் கிராமங்களுக்குள் புகுந்து பெரும் சேதங்களை ஏற்படுத்துகிறது.ஆற்றில் நீர்வரத்து குறைந்த பின், கரைகளை மண்ணை கொட்டி மூடி சீரமைப்பதும், அடுத்து வெள்ளப்பெருக்கின்போது மீண்டும் கரை உடைப்பு ஏற்படுவதும் வழக்கமாக இருந்தது.இந்நிலையில், கடந்த, இரண்டு ஆண்டுகளுக்கு முன், பெரும்பேடுகுப்பம் பகுதியில் கரை உடைப்பை தடுக்க கான்கிரீட் தடுப்பு சுவர் அமைத்து, கரைகள் பலப்படுத்தப்பட்டதால், கடந்த ஆண்டு மழையின்போது, அப்பகுதியில் உடைப்பு ஏற்படவில்லை. இதனால், அருகில் இருந்த கிராமங்கள் தப்பின.அதேசமயம், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி, தத்தமஞ்சி ஆகிய கிராமங்களில் ஆற்றின் கரைகள் உடைந்து மழைநீர் வெளியேறி, குடியிருப்புகளையும், விவசாய நிலங்களையும் மூழ்கடித்தன.இதனால் தத்தமஞ்சி, பிரளயம்பாக்கம், சோமஞ்சேரி, வஞ்சிவாக்கம், போலாச்சியம்மன்குளம், கணவான்துறை, தொட்டிமேடு, அவுரிவாக்கம், கம்மாளமடம் உள்ளிட்ட, 20 கிராமங்களை மழைநீர் சூழ்ந்தது. வீடுகளின் உள்ளே தண்ணீர் புகுந்ததால், உடமைகளை இழந்து, வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் கிராமவாசிகள் தவித்தனர். சம்பா பருவத்திற்கு பயிரிடப்பட்டிருந்த, 5,000 ஏக்கர் பரப்பு நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி பாழாயின.ஒவ்வொரு ஆண்டும் இதே நிலை தொடர்வதால், இதற்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்தும் வகையில், ரெட்டிப்பாளையம், சோமஞ்சேரி கிராமத்தில், 16 கோடி ரூபாயில், 420 மீ. நீளத்திலும், தத்தமஞ்சி கிராமத்தில், 11கோடி ரூபாயில், 650 மீ. நீளம், 7 மீ. உயரத்திலும் கான்கிரீட் தடுப்பு சுவர் அமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. தற்போது கட்டுமான பணிகளில் தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். மேலும், மழைநீர் வரும் பகுதிகளில் இருந்த மதகுகள் புதுப்பிக்கப்பட்டு வருகின்றன. கூடுதல் மதகுகள் அமைக்கவும் திட்டமிடப்பட்டு உள்ளது. கரைகளில் உள்ள முள்செடிகள் அகற்றப்படுகின்றன. பலவீனமாக உள்ள கரைப்பகுதிகள் கண்காணித்து, பொக்லைன் இயந்திரங்கள் உதவியுடன் பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகின்றன.வடகிழக்கு பருவமழை துவங்கும் முன், கான்கிரீட் தடுப்பு சுவர், மதகுகள் புதுப்பிப்பு, கரைகளை பலப்படுத்துவது உள்ளிட்ட பணிகளைமுடித்து, இனி ஆரணி ஆற்றில் எந்தவொரு பகுதியிலும் கரை உடைப்பு ஏற்படக்கூடாது என்பதற்காக பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.ஒவ்வொரு ஆண்டும் மழைக்காலங்களில் ஆற்று கரை உடைந்துவிடுமோ என்ற அச்சத்தில் இருந்த, 20க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு, அதிலிருந்து விமோசனம் கிடைத்துள்ளது.