திருவள்ளூர்:சாலையில் திரியும் கால்நடைகள் பறிமுதல் செய்து ஏலம் விடப்படும் என, கலெக்டர் எச்சரிக்கை விடுத்தும், அதை கண்டுகொள்ளாத அதிகாரிகளால், கலெக்டர் அலுவலக வளாகத்திலேயே கால்நடைகள் சுதந்திரமாக உலா வருகின்றன.திருவள்ளூர் மாவட்டத்தில், பிரதான சாலைகளான, சென்னை - கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலை, சென்னை - திருப்பதி தேசிய நெடுஞ்சாலை மற்றும் திருவள்ளூர் - ஸ்ரீபெரும்புதுார், செங்குன்றம், பூந்தமல்லி சாலைகளில் கால்நடைகள் சுற்றித் திரிகின்றன.மேலும், திருவள்ளூர் நகரில் ஜே.என்.சாலை, சி.வி.நாயுடு சாலை உள்ளிட்ட பகுதிகளில் கால்நடைகள் 'ஜாலி'யாக உலா வருகின்றன. இதனால், தினமும் போக்குவரத்து நெரிசலும், விபத்துகளும் ஏற்பட்டு வருகின்றன.மேய்ச்சல் நிலங்களில் கால்நடைகள் மேய்வதால், பயிர்கள் சேதமடைந்து வருவதாக விவசாயிகள், அவ்வப்போது கலெக்டரிடம் நேரில் வந்து புகார் அளித்து வருகின்றனர்.இதையடுத்து, சாலை மற்றும் விவசாய நிலங்களில் கால்நடைகளை திரியவிட்டால், அதை வருவாய், உள்ளாட்சி நிர்வாகங்கள் பறிமுதல் செய்து, கோசாலையில் ஒப்படைக்கப்படும் என, கலெக்டர் பிரபுசங்கர் பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார்.ஆனால், இந்த எச்சரிக்கையை மீறி, தற்போது வரை சாலைகளில் கால்நடைகள் உலா வருகின்றன. குறிப்பாக, எச்சரிக்கை விடுத்த கலெக்டர் அலுவலகத்திலேயே தினமும், 10க்கும் மேற்பட்ட கால்நடைகள் சுற்றித்திரிகின்றன.இதனால், கலெக்டர் அலுவலகத்திற்கு வருவோர், பணிபுரியும் ஊழியர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.எனவே, கால்நடைகளை சாலை மற்றும் கலெக்டர் அலுவலகத்தில் திரிய விடும் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தால் தான், இப்பிரச்னைக்கு தீர்வு கிடைக்கும் என, சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.