உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு

திருவள்ளூரில் 950 விநாயகர் சிலை பிரதிஷ்டை நாளை, 11ல் நீர்நிலைகளில் கரைப்பு

திருவள்ளூர்:திருவள்ளூர் மாவட்டம் முழுதும், 950 இடங்களில் விநாயகர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சிலைகள் அனைத்தும், நாளை 9 மற்றும் 11ல் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.திருவள்ளூர் மாவட்டத்தில், விநாயகர் சதுர்த்தியை பொதுமக்கள் நேற்று, உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். ஒரு அடி, இரண்டு அடி உயர களிமண்ணால் உருவாக்கப்பட்ட விநாயகர் சிலைகளை, பொதுமக்கள், குழந்தைகள் ஆர்வமாக வீடுகளுக்கு வாங்கிச் சென்றனர்.பூ, பழம், பொறி, கரும்பு, வாழை மரம் உள்ளிட்ட பூஜை பொருட்கள் விலை நேற்று அதிகமாக இருந்தாலும், அதனை பொருட்படுத்தாமல், பொதுமக்கள் வாங்கிச் சென்று, விநாயகரை வழிபட்டனர்.கோவில்களிலும், விநாயகர் சிலைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, அபிேஷகம் நடந்தது. திருவள்ளூர், என்.ஜி..ஓ., காலனி சந்தான விநாயகர் கோவிலில் கணபதி ேஹாமம் செய்ப்பட்டு, வெள்ளிகவசம் அணிவிக்கப்பட்டது.பூங்கா நகர் சிவ விஷ்ணு கோவிலில் உள்ள செல்வ விநாயகர், ஜெயா நகர் மகா வல்லப கணபதி கோவில், தீர்த்தீஸ்வரர் கோவிலில் உள்ள வரசித்தி விநாயகர், ஆயில் வெற்றி விநாயகர் கோவில் உள்ளிட்ட கோவில்களில், சிறப்பு அபிேஷகம் நடந்தது.திருவள்ளூர், ஊத்துக்கோட்டை, திருத்தணி, பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, திருவாலங்காடு, கடம்பத்துார் என, மாவட்டம் முழுதும், 950 விநாயகர் சிலைகள் அமைக்க போலீசார் அனுமதி அளித்துள்ளனர். ஐந்து அடி முதல் 10 அடி வரை, சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இச்சிலைகள் அனைத்தும், நாளை 9 மற்றும் 11ல் மாவட்ட நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட, 15 நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.

காலை மறுப்பு: மாலை அனுமதி

பூண்டி ஒன்றியம், வேளகாபுரம் கிராமத்தில் ஒரே பிரிவினர் இடையே இரண்டு கோஷ்டிகளாக செயல்பட்டு வருகின்றனர். சமீப காலமாக சுடுகாட்டு பிரச்சனை பெரிய அளவில் வெடித்து வந்தது. இந்நிலையில், வினாயகர் சதுர்த்தி விழாவிலும் இரண்டு கோஷ்டியினர் இடையே தகராறு ஏற்பட்டது.வேளகாபுரம் ஊராட்சியின் முன்னாள் தலைவர் ரமேஷ் தலைமையில் ஒரு பிரிவினர், அதே கிராமத்தைச் சேர்ந்த ராமன் மனைவி லதா தலைமையில் ஒரு பிரிவினர் வினாயகர் சதுர்த்தி விழா நடத்த போலீசாரிடம் அனுமதி கேட்டு மனு வழங்கினர். கடந்தாண்டு இரு கோஷ்டியினர் இடையே ஏற்பட்ட தகராறில் போலீஸ் பாதுகாப்புடன் இரண்டு பேரின் சுவாமி ஊர்வலம் நடந்தது. இதனால் இந்தாண்டு அனுமதி மறுக்கப்பட்டது.நேற்று காலை லதா கோஷ்டியை சேர்ந்தவர்கள் வினாயகர் சிலை வைத்து வழிபட்டனர். பெரியபாளையம் போலீசார் அனுமதியின்றி வைக்கப்பட்ட சிலையை பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரு கோஷ்டியினரும் திருவள்ளூர் ஆர்.டி.ஓ., அலுவலகம் சென்று சமரச பேச்சு நடத்தினர்.இருவரும் எவ்வித பிரச்சனையும் இன்றி சிலை வைத்து வழிபாடு நடத்துவதாக ஆர்.டி.ஓ., கற்பகத்திடம் தெரிவித்ததால், மாலையில் இருவருக்கும் சிலை அமைக்க அனுமதி வழங்கப்பட்டது. இதையடுத்து இருதரப்பிலும் விநாயகர் ஊர்வலம் சென்றனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தவழும் பாலவிநாயகர்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு சந்தன மரத்தில் 30 செமீ உயரத்தில் தவழும் பாலவிநாயகர் சிலையை திருமழிசையைச் சேர்ந்த சிற்பி வடிவமைத்து உள்ளது பகுதிவாசிகளிடையே ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசையை சேர்ந்தவர் டி.கே.பரணி, 55. சந்தன மரத்தாலான சிறிய விநாயகர் சிற்பத்தை உருவாக்கியதற்காக குடியரசுத் தலைவரின் தேசிய விருதைப் பெற்ற இவர் விக்டோரியா டெக்னிக்கல் இன்ஸ்டிடியூட், கிராப்ட்ஸ் எம்போரியம் என பல விருதுகளைப் பெற்றுள்ளார்.விநாயகர் சதுர்த்தி பண்டிகையை முன்னிட்டு 30 செ.மீட்டர் உயரம், 23 செ.மீ அகலம் கொண்ட தவழும் பாலவிநாயகர் சிலையை உருவாக்கியுள்ளார்.விநாயகருக்கு மூஷிக வாகனம் குடைபிடிப்பது போலவும், மற்றொரு மூஷிக வாகனம் வெண்சாமரம் வீசுவது போன்றும், விநாயகருக்கு கிளி பழம் அளிப்பது போலவும், பாலவிநாயகர் தவழ்வது போலவும் இந்த அற்புதமாக சிலை உருவாகியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி