நீர்வரத்து கால்வாய் ஆக்கிரமித்து சாலை பனை மரங்களும் வெட்டி சாய்ப்பு
திருவள்ளூர்:திருமழிசை அடுத்த மேல்மணம்பேடு பகுதியில் திருமழிசை ஏரிக்கு செல்லும் பங்காரு இணைப்பு நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமித்து மண் சாலையாக மாறியுள்ளது பகுதிவாசிகளிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமழிசை அடுத்துள்ள புதுச்சத்திரம் பகுதியில் உள்ள அணைக்கட்டில் இருந்து செம்பரம்பாக்கம் ஏரிக்கு செல்லும் பங்காரு கால்வாய் உள்ளது. இதில் வெள்ளவேடு பகுதியில் உள்ள பங்காரு கால்வாயில் ஒரு பகுதி பிரிந்து திருமழிசை ஏரிக்கு செல்லும் வகையில் இரண்டு கிலோ மீட்டர் துார இணைப்பு கால்வாய் உள்ளது. இந்த கால்வாய் திருமழிசை - ஊத்துக்கோட்டை நெடுஞ்சாலையோரம் வந்து திருமழிசை பகுதியில் உள்ள சுந்தரம் அரசு மேல்நிலைப்பள்ளி காம்பவுண்ட் அருகே திருமழிசை ஏரிக்கு செல்லும் வகையில் அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு நீர் வரத்துக்கால்வாய் உள்ளது.மேல்மண்பேடு பகுதியில் அமைந்துள்ள நீர்வரத்து கால்வாய் போதிய பராமரிப்பு இல்லாததால் புதர் மண்டி உள்ளது.இதையடுத்து இப்பகுதியில் ஆளும் கட்சியைச் சேர்ந்த நபரின் உறவினர் ஒருவர் புதியதாக வீட்டு மனையை உருவாக்கி வருகிறார். இந்த தனியார் வீட்டு மனை நிலத்திற்கு சாலை வசதி இல்லாதால் தற்போது இந்த நீர் வரத்து கால்வாய் ஆக்கிரமித்து மண் சாலையாக மாற்றப்பட்டுள்ளது.தற்போது திருமழிசை ஏரியில் அரசு உத்தரவுப்படி சவுடு மணல் அள்ளும் பணி நடந்து வருகிறது. இதனால் இணைப்பு கால்வாய் மாயமாகும் நிலை ஏற்பட்டுள்ளது.இதுகுறித்து நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என, விவசாயிகள் மற்றும் பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர்.மேலும் இந்த கால்வாய் அருகே அரசு நிலத்தில் வளர்ந்திருந்த 10க்கும் மேற்பட்ட பனை மரங்களை எவ்வித அனுமதியுமின்றி வெட்டப்பட்டதாக பகுதிவாசிகள் குற்றம் சாட்டுகின்றனர். எனவே, மாவட்ட நிர்வாகம் நீர் வரத்து கால்வாய் பகுதியை ஆய்வு செய்ய வேண்டுமெனவும் அனுமதியின்றி பனை மரங்களை வெட்டியவர்கள் மீது நடவடிக்கை எடுத்து கால்வாய் ஆக்கிரமிப்பை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென திருமழிசை, மேல்மணம்பேடு பகுதிவாசிகள் மற்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.