மழைநீர் கால்வாய் படுமோசம் துார்வார விவசாயிகள் எதிர்பார்ப்பு
பொன்னேரி:பொன்னேரி அடுத்த மடிமைகண்டிகை கிராமத்தில் இருந்து ஆசானபூதுார் ஏரிக்கு செல்லும் மழைநீர் கால்வாய் முழுதும் கோரைப்புற்கள் வளர்ந்து பராமரிப்பு இன்றி கிடக்கிறது.கால்வாயின் இருபுறமும் விவசாயம் செய்யப்படுகிறது. மழைக்காலங்களில் விளைநிலங்களில் தேங்கும் அதிகப்படியான தண்ணீரை கால்வாயில் வெளியேற்றி, விவசாயிகள் நெற்பயிர்களை பாதுகாக்கின்றனர். மழைவிட்ட பின், கால்வாயில் தேங்கியிருக்கும் தண்ணீரை, மீண்டும் தேவையான நேரங்களில் பாசனத்திற்கு பயன்படுத்துவர்.கால்வாய் பராமரிப்பு இன்றி இருப்பதால், வடகிழக்கு பருவமழை துவங்கும் நிலையில், விவசாய நிலங்களில் தேங்கும் தண்ணீரை வெளியேற்ற வழியின்றி கிடக்கிறது.மேலும், நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கும் வாய்ப்பு உள்ளதுடன், ஏரிக்கு மழைநீர் செல்வதிலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.எனவே, கால்வாயை சூழ்ந்துள்ள கோரைப்புற்களை அகற்றி, கரைகளை பலப்படுத்த உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.