உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / சுற்றுச்சுவர் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி

சுற்றுச்சுவர் இல்லாத அரசு தொடக்கப்பள்ளி

பள்ளிப்பட்டு: பள்ளிப்பட்டு ஒன்றியம், சூரராஜபட்டடை கிராமத்தில், நகரி சாலையை ஒட்டி, அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பழமையான இந்த பள்ளியில், 60 மாணவர்கள் படித்து வருகின்றனர். பள்ளி வளாகத்திற்கும், சாலைக்கும் இடையே அமைந்திருந்த சுற்றுச்சுவர், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் இடித்து சமன் செய்யப்பட்டது. ஆனால், இதுவரையில் மீண்டும் சுற்றுச்சுவர் கட்டப்படவில்லை. இதனால், மாணவர்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாக உள்ளது. விளையாட்டு பாடவேளையில், மாணவர்கள் எல்லை தாண்டி சாலைக்கு வரும் நிலை உள்ளது. பள்ளியின் கூரையும் பழுதடைந்துள்ளது. கூரையை சீரமைக்கவும், மாணவர்களின் பாதுகாப்பு கருதி, புதிய சுற்றுச்சுவர் உடனடியாக கட்டவும் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பகுதிவாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். l பள்ளிப்பட்டு ஒன்றியம், அத்திமாஞ்சேரிபேட்டையில் அரசு தொடக்க பள்ளி செயல்பட்டு வருகிறது. பள்ளிப்பட்டு செல்லும் சாலையில், பஜார் மற்றும் பேருந்து நிலையத்தை ஒட்டி அமைந்துள்ள இந்த பள்ளியில், 150 மாணவர்கள் படித்து வருகின்றனர். மாநில நெடுஞ்சாலைக்கும், நுழைவாயிலுக்கும் இடையே ஒரு மீட்டர் இடைவெளி மட்டுமே உள்ளது. இந்த இடைவெளியில், சமீபத்தில் கழிவுநீர் கால்வாய் புதுப்பிக்கப்பட்டது. இந்த கால்வாய் திறந்தநிலையில் விடப்பட்டுள்ளது. இதனால், சாலையோரம் நடந்து வரும் மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர். சாலையில் பயணிக்கும் வாகனங்களுக்கு வழிவிட்டு ஒதுங்கும் போது, கால்வாயில் தவறி விழும் நிலை உள்ளது. மாணவர்களின் பாதுகாப்பு கருதி, இந்த கழிவுநீர் கால்வாய்க்கு கான்கிரீட் மேல்தளம் அமைக்க வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்