உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / மந்த கதியில் ரூ.4 கோடியில் ஓடை கால்வாய் மீது உயர்மட்ட பாலம்

மந்த கதியில் ரூ.4 கோடியில் ஓடை கால்வாய் மீது உயர்மட்ட பாலம்

திருவாலங்காடு, திருவாலங்காடு ஒன்றியத்திற்கு உட்பட்டது ராமாபுரம் ஊராட்சி. இங்கு, அரக்கோணம் செல்லும் சாலையில் ராமாபுரம் ஓடைக்கால்வாய் அமைந்துள்ளது.இந்த ஓடை கால்வாய்க்கு மூதூர், கோணலம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்யும் மழைநீர் மற்றும் ஏரியில் இருந்து வெளியேறும் உபரி நீர் கலப்பதால், ஆண்டு முழுதும் ஓடைக்கால்வாயில் நீர் சென்ற படி இருக்கும்.ராமாபுரம் சுற்றுவட்டார கிராமத்தைச் சேர்ந்த மக்கள் திருத்தணி, அரக்கோணம் உள்ளிட்ட நகரங்களுக்கு செல்ல, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஓடை கால்வாய் பகுதியில் உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என, அதிகாரிகளிடம் கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, 2021ம் ஆண்டு, ஆய்வு செய்த அரசு அதிகாரிகள் உயர்மட்ட பாலம் குறித்து அரசுக்கு முன்மொழிவு அனுப்பினர். பின் 2024ம் ஆண்டு 4 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது.இதையடுத்து, அதே ஆண்டு டெண்டர் விடப்பட்டு பணி துவங்கி நடைபெற்று வருகிறது. ஓராண்டுக்கும் மேலாக பணி நடப்பதால் ராமாபுரம் சுற்றுவட்டார மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். எனவே உயர்மட்ட பாலப் பணியை அதிகாரிகள் விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்திஉள்ளனர்.இதுகுறித்து ராமாபுரம் கிராமத்தைச் சேர்ந்த ரா.பரிமளம் கூறியதாவது:ராமாபுரம் சுற்றுவட்டாரங்களைச் சேர்ந்த ரங்காபுரம், காவேரிராஜபுரம், அத்திப்பட்டு, முத்துக்கொண்டாபுரம் உள்ளிட்ட 20 கிராமங்களைச் சேர்ந்த மக்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு அரக்கோணம் செல்ல ஓடை கால்வாயை கடந்து செல்ல வேண்டி உள்ளது.மழைக்காலத்தில் ஓடையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் 10 - 15 கி.மீ. தூரம் சுற்றிக்கொண்டு திருவாலங்காடு அல்லது கனகம்மாசத்திரம் வழியாக செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகின்றனர். எனவே உயர்மட்ட பாலப்பணியை விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து, திருவள்ளூர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தி உள்ளோம். 70 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளன. இரண்டு மாதத்திற்குள்ளாக பணி முடிக்கப்பட உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை