கனகம்மாசத்திரம் ஏரி உபரிநீர் கால்வாய் பணி மும்முரம்
திருவாலங்காடு:கனகம்மாசத்திரம் -திருவாலங்காடு மாநில நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது வி.ஜி.கே.புரம் கிராமம். இங்குள்ள சிற்றேரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் மாநில நெடுஞ்சாலைக்கு குறுக்கே பாய்ந்து கூளூர் ஏரியை சென்றடைகிறது. ஏரி நீர் சாலையை கடந்து செல்ல சாலையின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்நிலையில் பருவமழையின் போது ஏரியில் இருந்து அதிகளவு உபரிநீர் வெளியேறும் போது கால்வாய் துார்ந்து உள்ளதாலும் சிறுதரைப்பாலத்தின் உயரம் குறைவு என்பதாலும் நீர் சாலையில் பெருக்கெடுத்து ஓடுகிறது. தற்போது இச்சாலையில் கனகம்மாசத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் நுாலகம், ரேஷன் கடை உள்ளது. கடந்தாண்டு டிசம்பரில் பெய்த மழையில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முட்டியவு ஏரி நீர் புகுந்தது. இதனால் நோயாளிகள் அவதியடைந்தனர். இதையடுத்து வி.ஜி.கே.புரம் ஏரியின் உபரிநீர் கால்வாயை துார்வார வேண்டும் மற்றும் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இதையடுத்து வெள்ள தடுப்பு திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உபரிநீர் கால்வாய் துார்வாரப்பட்டு, தரைப்பாலம் அமைக்கும் பணி மும்முரமாக நடந்து வருகிறது.