உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / * பராமரிப்பின்றி அத்திப்பட்டு ரயில்வே பாலங்கள்...பலவீனம்!:துறைமுக சாலையில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

* பராமரிப்பின்றி அத்திப்பட்டு ரயில்வே பாலங்கள்...பலவீனம்!:துறைமுக சாலையில் அச்சத்தில் வாகன ஓட்டிகள்

மீஞ்சூர்:தினமும் ஆயிரக்கணக்கான கனரக வாகனங்கள் சென்று வரும் துறைமுக சாலையில், உரிய பராமரிப்பு இல்லாததால், அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மரங்களும் வளர்ந்து, பாலம் பலவீனமாக வருவதால், விபத்து அபாயத்தில் வாகன ஓட்டிகள் பயணிக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்த அத்திப்பட்டு, காட்டுப்பள்ளி பகுதிகளில், எண்ணுார் காமராஜர் துறைமுகம், அதானியின் காட்டுப்பள்ளி துறைமுகம், கப்பல்கட்டும் தளம், எரிவாயு முனையங்கள், பெட்ரோலிய நிறுவனங்கள், வடசென்னை அனல் மின் நிலையங்கள் 1, 2, 3 என, பல்வேறு தொழில் நிறுவனங்கள் உள்ளன.இந்நிறுவனங்களுக்கு தினமும், 10,000க்கும் அதிகமான கனரக வாகனங்கள் வந்து செல்கின்றன. தமிழகம், ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்து, மேற்கண்ட நிறுவனங்களுக்கு வந்து செல்லும் கனரக வாகனங்கள், அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலத்தை கடந்து பயணிக்கின்றன.இங்கு, 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட பழைய மேம்பாலம் ஒன்றும், 10 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட புதிய மேம்பாலம் ஒன்று பயன்பாட்டில் உள்ளன. பழைய மேம்பாலம் வாகனங்கள் தொழில் நிறுவனங்களுக்கு செல்வதற்கும், புதிய மேம்பாலம் அங்கிருந்து திரும்புவதற்கும் பயன்படுத்தப்படுகிறது. தற்போது இரண்டும் உரிய பராமரிப்பு இன்றி உள்ளன.பழைய மேம்பாலத்தின் கான்கிரீட் தளம் முற்றிலும் சேதம் அடைந்து, ஆங்காங்கே விரிசல்களுடன் உள்ளன. கனரக வாகனங்கள் தொடர்ந்து பயணிக்கும் நிலையில், ஒவ்வொரு பகுதியாக பெயர்ந்து, பள்ளங்கள் உருவாகி வருகின்றன.பள்ளங்களில் மழைநீர் தேங்குவதால், உள்ளிருக்கும் இரும்பு கம்பிகள் துருப்பிடித்து வருகின்றன. இதனால், பாலத்தின் உறுதிதன்மை கேள்விக்குறியாகி வருகிறது. புதிய பாலத்தின் பக்கவாட்டு சரிவு பகுதிகளில் மரங்கள் வளர்ந்து இருக்கின்றன. இவற்றின் வேர்ப்பகுதிகளில் மண் சரிவு ஏற்படுவதற்கும், பாலம் பலவீனம் அடைவதற்கும் வாய்ப்பாகி விடுகிறது.கடந்த, 2019ம் ஆண்டு, பெட்ரோல் ஏற்றி சென்ற டேங்கர் லாரி ஒன்று, புதிய மேம்பாலத்தின் பக்கவாட்டு பகுதியில் இருந்த இரும்பு தடுப்பில் மோதி, 20 மீட்டருக்கு கீழே, அத்திப்பட்டு புதுநகர் ரயில் நிலையம் செல்லும் சாலையில் விழுந்து கவிழ்ந்தது; அதிஷ்டவசமாக பெரிய அசம்பாவிதங்கள் ஏதும் நேரவில்லை.இரும்பு தடுப்புகள் சேதம் அடைந்து, ஐந்து ஆண்டுகள் ஆன நிலையில், இதுவரை அவை சீரமைக்கப்படவில்லை. அத்திப்பட்டில் ரயில்வே பாலங்கள் பராமரிப்பில், நெடுஞ்சாலைத் துறை மெத்தனம் காட்டுவதால், அவை பலவீனம் அடைந்து வருகிறது. பாலங்களுக்கு பாதிப்பு அதிகரித்தால், போக்குவரத்து ஸ்தம்பிக்கும் அபாயம் உள்ளது. இதனால் துறைமுகங்கள் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் தொழில் பாதிக்கும் நிலையும் ஏற்படும். மேலும், பாலங்கள் பராமரிப்பின்றி கிடப்பது, அதில் பயணிக்கும் வாகன ஓட்டிகள் இடையே அச்சத்தையும் ஏற்படுத்தி வருகின்றன.நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள் உடனடியாக மேற்கண்ட பாலங்களை ஆய்வு மேற்கொண்டு, சீரமைக்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இதுகுறித்து, சமூக ஆர்வலர்கள் கூறியதாவது:பாலங்கள் பலவீனமாகி வருவது குறித்து, நெடுஞ்சாலைத் துறையினரிடம் தொடர்ந்து தெரிவித்து வருகிறோம். தொழில் நிறுவனங்களுக்கு மட்டுமின்றி, பொன்னேரி, மீஞ்சூர் பகுதிகளை சேர்ந்தவர்கள், கடற்கரை சாலை வழியாக சென்னை செல்ல, இந்த பாலத்தை தான் பயன்படுத்துகின்றனர்.தொடர் வாகன போக்குவரத்தால் பாலம் சேதம் அடைந்துள்ள நிலையில், அசம்பாவிதங்களுக்கு வாய்ப்பு உள்ளது. மேலும், மேம்பாலத்தில் ஓரங்களில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுவதால், விபத்துக்களும் நேரிடுகிறது. அசம்பாவிதங்கள் நடக்கும்முன், நெடுஞ்சாலைத் துறையினர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.இதுகுறித்து, நெடுஞ்சாலைத் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'தற்போது மீஞ்சூர், நந்தியம்பாக்கம் பகுதிகளில் மேம்பால இணைப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அத்துடன், அத்திப்பட்டு புதுநகர் ரயில்வே மேம்பாலத்தை சீரமைக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்படும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை