ஆவடியில் விடியாத சாலை வாகன ஓட்டிகள் அதிருப்தி
ஆவடி,:ஆவடி அடுத்த, பருத்திப்பட்டு - கோலடி சாலை, திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்டது. இங்கு, மகாலட்சுமி நகர், எமரால்டு அவென்யூ, எம்.ஜி.ஆர்., நகர், கே.எஸ்.ஆர்., நகர் உள்ளிட்ட பகுதிகள் உள்ளன.சாலையின் ஒரு பகுதி ஆவடி மாநகராட்சிக்கும், கோலடி ஏரி உட்பட்ட பகுதிகள் திருவேற்காடு நகராட்சிக்கு உட்பட்டவையாகவும் உள்ளன.இந்த சாலையில், மூன்றுக்கும் மேற்பட்ட தனியார் பள்ளி, கல்லுாரிகள், செங்கல் சூளை மற்றும் சிறு, குறு கடைகள் உள்ளன. ஒன்றரை கி.மீ., துாரமுள்ள இந்த சாலையின் இருபுறமும், கருவேல மரங்கள் வளர்ந்து, காட்டுக்குள் பயணிப்பதுபோல் உள்ளது; மின்விளக்குகளை, அதன் கிளைகள் மறைத்துள்ளதால், இருள் சூழ்ந்து காணப்படுகிறது.ஆவடியில் இருந்து திருவேற்காடு, அயப்பாக்கம், அம்பத்துார், அத்திப்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோர். இந்த சாலையை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர்.பூந்தமல்லி வழியாக அம்பத்துார் செல்லும் வாகனங்கள், ஆவடி வழியாக 10 கி.மீ., சுற்றி, அம்பத்துார் செல்வதற்கு பதில், மேற்கூறிய சாலையில் விரைவாக சென்று வருகின்றனர்.முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை, ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாக, குண்டும் குழியுமாக உள்ளது. சாலையில் அடிக்கடி கட்டட கழிவு மற்றும் 'வெட் மிக்ஸ்' கொட்டி சமன்படுத்தப்படுகிறது. ஆனால், நிரந்தர தீர்வு காண எந்த நடவடிக்கை எடுக்கவில்லை.சாலையில் 30க்கும் மேற்பட்ட பள்ளங்கள் இருப்பதால், வாகன ஓட்டிகள் '8' போட்டபடி சாகசத்தில் ஈடுபட்டு செல்ல சிரமப்படுகின்றனர்.மின் விளக்குகளை சரிசெய்வதோடு, சாலையையும், ஆவடி மாநகராட்சி மற்றும் திருவேற்காடு நகராட்சி அதிகாரிகள் சீரமைக்க வேண்டும் என, வாகன ஓட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.