எம்.ஆர்.எப்., தொழிற்சாலை தொழிலாளர்கள் போராட்டம்
அரக்கோணம்,அரக்கோணம், எம்.ஆர்.எப்., தொழிற்சாலையின் ஒப்பந்த தொழிலாளர்கள், ஊதிய உயர்வு, பணி நிரந்தரம் கோரி, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த இச்சிபுத்துாரில், எம்.ஆர்.எப்., டயர் தயாரிக்கும் தொழிற்சாலை உள்ளது. இங்கு, 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும். 10 ஆண்டுகளாக ஒப்பந்த தொழிலாளர்களாக பணிபுரிபவர்களுக்கு ஊதிய உயர்வு வழங்க வேண்டும். ஒப்பந்த பணியாளர்கள் அனைவருக்கும், நிரந்தர பணியாளர்களுக்கு வழங்குவது போல் தரமான உணவு வழங்க வேண்டும் என வலியுறுத்தி, நேற்று காலை வேலையை புறக்கணித்து, தொழிற்சாலை நுழைவு வாயில் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.அரக்கோணம் போலீசார், தொழிற்சாலை நிர்வாக அலுவலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சு நடத்தி, நிர்வாகத்தின் கவனத்திற்கு கொண்டு சென்று, உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினர்.இதையடுத்து, தொழிலாளர்கள் போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்பினர்.