| ADDED : ஜூலை 12, 2024 02:17 AM
ஆர்.கே.பேட்டை:ஆர்.கே.பேட்டை ஒன்றியம், ஞானகொல்லிதோப்பு அருகே பாயும் ஓடை, ராணிப்பேட்டை மாவட்டம், சோளிங்கர் ஒன்றியம், வெங்குப்பட்டு அருகே நந்தி ஆறாக உருவாகிறது.இங்கிருந்து ராமகிருஷ்ணாபுரம், கோரமங்கலம் வழியாக பாய்ந்து திருத்தணி அடுத்த நல்லாட்டூரில், கொசஸ்தலை ஆற்றில் கலக்கிறது.இந்நிலையில், வெங்குப்பட்டு கிராமத்தின் வடக்கில் பாயும் நந்தி ஆறு, தற்போது புதர் மண்டி கிடக்கிறது. ஆற்றில், கருவேல மரங்கள் ஏராளமாக வளர்ந்துள்ளன. கிராமத்தை ஒட்டியே ஆறு அமைந்துள்ளதால், வரும் மழைக்காலத்தில், ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, திசை மாறி பாயவும் வாய்ப்பு உள்ளது. இதனால், வெங்குப்பட்டு மற்றும் அதை சுற்றியுள்ள பரவத்துார் பகுதிவாசிகள் அச்சத்தில் தவித்து வருகின்றனர்.வெங்குப்பட்டு கிராமத்தில் இருந்து தரைப்பாலம் வழியாக நந்தி ஆற்றை கடந்து, புச்சிநாயுடு கண்டிகை வழியாக ஆர்.கே.பேட்டை மற்றும் திருத்தணிக்கு பகுதிவாசிகள் இருசக்கர வாகனங்களில் பயணிக்கின்றனர். மழைக்காலத்தில் பெரும் விபரீதம் ஏற்படும் முன், நந்தி ஆற்றில் வளர்ந்துள்ள மரங்களை வெட்டி அகற்ற வேண்டும் என, சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.