உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / குளத்தை சுற்றி கால்வாய் பணி நிறுத்தம் தோண்டிய பள்ளத்தால் குடியிருப்பினர் அவதி

குளத்தை சுற்றி கால்வாய் பணி நிறுத்தம் தோண்டிய பள்ளத்தால் குடியிருப்பினர் அவதி

பொன்னேரி:பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அருகே, ஆனந்தவல்லி தாயார் உடனுறை அகத்தீஸ்வர் கோவில் உள்ளது. இக்கோவிலின் முகப்பில் குளம் உள்ளது. ஆண்டுதோறும் நடைபெறும் பங்குனி பிரம்மோற்சவத்தின்போது, குளத்தில் தெப்ப உற்சவம் நடைபெறுகிறது.குளத்தை சுற்றிலும் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. குடியிருப்புகளின் கழிவுநீர் குளத்திற்கு வருவதை தடுக்க, பொன்னேரி நகராட்சி சார்பில், 14 லட்சம் ரூபாயில் கழிவுநீர் கால்வாய் அமைக்க திட்டமிடப்பட்டது.சில தினங்களுக்கு முன், குளக்கரையை சுற்றி உள்ள சாலையில் இதற்கான கட்டுமான பணிகள் துவங்கப்பட்டன. குளத்தின் சுற்றுச்சுவரை ஒட்டி கால்வாய் அமைப்பதற்காக பள்ளங்கள் தோண்டப்பட்டன.கோவில் குளத்தை சுற்றிலும், கழிவுநீர் கால்வாய் அமைப்பதற்கு பக்தர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து, ஹிந்து சமய அறநிலையத் துறையினருக்கும் புகார்கள் வந்ததால், கால்வாய் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன.இந்நிலையில், கால்வாய் அமைக்க தோண்டப்பட்ட பள்ளங்கள் சரிவர மூடப்படாமல் இருப்பதால், குடியிருப்புவாசிகள் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.நடந்து செல்பவர்கள் பள்ளங்களில் இடறி விழுகின்றனர். குடியிருப்புவாசிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ளனர்.மேலும், அடுத்த மாதம் பிரம்மோற்சவ விழாவும் துவங்க உள்ளது. இதே நிலை தொடர்ந்தால், தெப்போற்சவம் விழா நடைபெறுவதில் சிக்கல் ஏற்படும் என்பதால், பக்தர்கள் அதிருப்தியில் உள்ளனர்.கால்வாய் பணிகளுக்காக தோண்டப்பட்ட பள்ளங்களை உடனடியாக மூடி, சாலை அமைக்க வேண்டும் என, பக்தர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !