| ADDED : ஜூன் 29, 2024 02:20 AM
கும்மிடிப்பூண்டி:சென்னை --கோல்கட்டா தேசிய நெடுஞ்சாலையில், தச்சூர் முதல் கும்மிடிப்பூண்டி வரையிலான சாலையின் ஓரம், ஏராளமான உணவகங்கள் உள்ளன. அங்கு வரும் வாகன ஓட்டிகள், வாகனங்களை இணைப்பு சாலையில் நிறுத்திவிட்டு சாப்பிட செல்வர்.ஆனால், பெருவாயல், வேர்க்காடு, கும்மிடிப்பூண்டி பைபாஸ் ஆகிய பகுதிகளில் உள்ள உணவகங்களுக்கு வரும் கனரக வாகன ஓட்டிகள், இணைப்பு சாலையில் செல்வது கிடையாது. மாறாக தேசிய நெடுஞ்சாலையோரம் ஆபத்தாக வாகனங்களை நிறுத்தி செல்வதை வழக்கமாக கொண்டுள்ளனர்.இதனால், அதே திசையில் பின்னால் வேகமாக வரும் மற்ற வாகனங்கள், சாலையோரம் நிற்கும் கனரக வாகனங்களால் திக்கு முக்காடி போகின்றனர். சில சமயங்களில், நின்றிருக்கும் வாகனங்கள் மீது பின்னால் வரும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகின்றன.தேசிய நெடுஞ்சாலை ஆணையம் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ரோந்து போலீசார், காண்காணிப்பு பணியில் ஈடுபட்டு, தேசிய நெடுஞ்சாலை ஓரம் நிற்கும் வாகனங்களை, இணைப்பு சாலையில் நிறுத்த வலியுறுத்த வேண்டும். மீறுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.