உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / முதல்வர் கோப்பை போட்டியில் குளறுபடி கலெக்டர் ஆபீசில் மாணவர்கள் போராட்டம்

முதல்வர் கோப்பை போட்டியில் குளறுபடி கலெக்டர் ஆபீசில் மாணவர்கள் போராட்டம்

திருவள்ளூர்: முதல்வர் கோப்பை செஸ் விளையாட்டு போட்டி முடிவுற்றதாக அறிவித்ததால், அதிருப்தியடைந்த விளையாட்டு வீரர்கள், கலெக்டர் அலுவலகத்தில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.திருவள்ளூர் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டி, கடந்த 10ல் துவங்கியது. திருவள்ளூர் மாவட்ட விளையாட்டு மைதானம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில், அத்லெட்டிக், நீச்சல், சிலம்பம், செஸ் உள்ளிட்ட போட்டிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. வரும், 24 வரை பல்வேறு போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இந்நிலையில், பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவியர் மற்றும் பொதுமக்கள் பிரிவு செஸ் போட்டி, 16 மற்றும் 17 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெறும் என, மாவட்ட விளையாட்டு துறை அறிவித்திருந்தது. நேற்றைய போட்டியில் பங்கேற்க, 250க்கும் மேற்பட்டோர் மாவட்ட விளையாட்டு மைதானத்திற்கு காலையில் வந்தனர்.ஆனால், நேற்று நடைபெறுவதாக இருந்த செஸ் போட்டி அனைத்தும், 15ம் தேதி நடத்தப்பட்டு விட்டதாக, அங்கிருந்த அலுவலர்கள் தெரிவித்தனர். இதனால், ஏமாற்றமடைந்த விளையாட்டு வீரர்கள், மாவட்ட விளையாட்டு அலுவலர் அறையை முற்றுகையிட்டனர். 50க்கும் மேற்பட்டோர், திருவள்ளூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு, போராட்டம் நடத்தினர். இதுகுறித்து விளையாட்டு வீரர்கள் கூறுகையில், '16ல் நடக்கவிருந்த போட்டியை, 15ல் நடத்தி முடித்ததற்கான காரணம் தெரியவில்லை. 'போட்டியில் ஆர்வமாக பங்கேற்க வந்த எங்களுக்கு கடும் ஏமாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, 15ல் நடத்திய போட்டியை ரத்து செய்து விட்டு, மீண்டும் செஸ் போட்டி நடத்த வேண்டும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ