அதிகாரிகளிடம் மனு கொடுப்பவர்கள் மனநிறைவோடு செல்ல வேண்டும்: கலெக்டர்
திருத்தணி:திருத்தணி ஒன்றியம், பீரகுப்பம் கிராமத்தில், 'மக்கள் தொடர்பு திட்ட' முகாம், கலெக்டர் பிரதாப் தலைமையில் நேற்று நடந்தது. திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா வரவேற்றார். திருத்தணி தி.மு.க., - எம்.எல்.ஏ., சந்திரன் முன்னிலை வகித்தார்.இதில், கலெக்டர் பிரதாப் பேசியதாவது:மக்களைத் தேடி அரசாங்கம் சென்று அவர்களுக்கு தேவைகள் அறிந்து, நலத்திட்ட உதவிகள் வழங்குவதற்கு தான், மக்கள் தொடர்பு முகாம் நடத்தப்படுகிறது. தற்போது, 300க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டு, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு மனுவின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பரிந்துரை செய்துள்ளேன்.மனுக்கள் பெறும் அதிகாரிகள் அலட்சியம் காட்டாமல், தீர்க்க முடியும் பிரச்னை உடனடியாக தீர்வு கண்டு பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும்.தீர்க்கப்படாத பிரச்னை என்றால், மனுதாரர்களுக்கு உரிய விளக்கம் அளித்து, அதை எவ்வாறு பெறலாம் என, ஆலோசனை வழங்க வேண்டும்.அரசு அலுவலகங்களை தேடி மனு கொடுக்க வரும் பயனாளிகள், திரும்பி செல்லும் போது மனநிறைவோடு செல்ல வேண்டும். அந்த அளவில் தான் அதிகாரிகள் செயல்பட வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.தொடர்ந்து மக்கள் தொடர்பு முகாமில் வைக்கப்பட்டுள்ள பல்வேறு துறையின் கண்காட்சியை பார்வையிட்டு திட்டங்கள் குறித்து கேட்டறிதார்.முகாமில், 60 பேருக்கு பட்டா மாற்றம், ஆறு பேருக்கு வேளாண் துறை வாயிலாக விவசாய கருவிகள், 24 பேருக்கு கூட்டுறவு துறை சார்பில் வங்கிக்கடன், ஒன்பது பேருக்கு விபத்து மற்றும் நிவாரணம், 125 பேருக்கு ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 22 பேருக்கு வாக்காளர் அட்டையை கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ., சந்திரன் ஆகியோர் வழங்கினர்.மேலும், 20 பேருக்கு மாற்றுத்திறனாளி துறையின், மூன்று சக்கர ஸ்கூட்டர், ஐந்து பெண்களுக்கு ஆதிதிராவிட மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில் தையல் இயந்திரம் உள்பட மொத்தம், 335 பயனாளிகளுக்கு, 27.83 லட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளையும் கலெக்டர் பிரதாப், எம்.எல்.ஏ., சந்திரன் வழங்கினர்.நிகழ்ச்சியில், தனித் துணை கலெக்டர் கணேசன், மாவட்ட பிற்படுத்தப்பட்ட நல அலுவலர் தனலட்சுமி, ஆதிதிராவிடர் நல அலுவலர் செல்வராணி, மாவட்ட வழங்கல் அலுவலர் கண்ணன் உட்பட பலர் பங்கேற்றனர். திருத்தணி தாசில்தார் மலர்விழி நன்றி கூறினார்.