மாமியாரை கொல்ல முயன்ற மருமகள் உள்பட இருவர் கைது
திருத்தணி: திருவாலங்காடு ஒன்றியம் பூனிமாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி மகன் முனிவேல்,40. இவர் திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருகிறார். கடந்த, பத்து ஆண்டுகளுக்கு முன் முனிவேல், விழுப்புரம் பகுதியை சேர்ந்த ஜான்சிராணி, 38, என்பவரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டார்.ஜான்சிராணி, தன் மாமியார் ஜெகதம்மா, 60, என்பவரிடம் அவர் பெயரில் உள்ள நிலத்தை தனது பெயருக்கு மாற்றி எழுதி தரவேண்டும் என தொந்தரவு செய்து வந்தார். ஜெகதம்மா நான் உயிருடன் இருக்கும் வரை உன் பெயருக்கு நிலத்தை எழுதி தரமாட்டேன் என மருமகளிடம் கூறி வந்ததால், இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு வந்தது.இந்நிலையில் ஜான்சிராணி, தன் உறவினர்களான சீனிவாசன்,37, லோகநாதன்,40 ஆகியோரை இரு நாட்களுக்கு முன் பூனிமாங்காட்டிற்கு அழைத்து வந்து ஒரு வீட்டில் தங்க வைத்துள்ளார். நேற்று முன்தினம், வீட்டில் தனியாக 'டிவி' பார்த்துக்கொண்டிருந்த ஜெகதம்மாவை, சீனிவாசன், லோகநாதன் ஆகியோர் ஜெகதம்மாவின் கழுத்தை இறுக்கி கொலை செய்ய முயன்றனர்.தொடர்ந்து ஜான்சிராணி மாமியாரை தாக்கியுள்ளார். ஜெகதம்மா அலறல் சத்தம் கேட்டதும், அவ்வழியாக சென்றவர்கள் வீட்டிற்குள் சென்று, ஜெகதம்மாவை மீட்டு திருத்தணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். கனகம்மாசத்திரம் போலீசார் ஜான்சிராணி, சீனிவாசன் ஆகியோரை கைது செய்தனர்.