கவரைப்பேட்டையில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் வருமா?
கும்மிடிப்பூண்டி: பேரூராட்சிக்கு நிகரான வளர்ச்சி கண்டு வரும் கவரைப்பேட்டை பகுதி, கீழ்முதலம்பேடு ஊராட்சிக்கு உட்பட்ட ஒரு கிராமமாக உள்ளது.கவரைப்பேட்டையில் குடியிருப்பு பகுதிகள் மற்றும் மக்கள் தொகை நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், அதன் தேவையை பூர்த்தி செய்ய முடியாமல் கீழ்முதலம்பேடு ஊராட்சி நிர்வாகம் திணறி வருகிறது.குறிப்பாக அங்குள்ள குடியிருப்பு மற்றும் கடைகளில் இருந்து, தினசரி மூன்று டன் குப்பை சேகரமாகிறது. சேகரமாகும் கழிவுகளை குவித்து, திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த போதிய இடவசதியும், துாய்மை பணியாளர்களும் இல்லை. அதனால், குப்பையை சேகரிக்கும் ஊராட்சி நிர்வாகம், ஏரிக்கரை, சுடுகாடு, பொது இடம் என கண்ட இடங்களில் குவித்து, எரித்து வருகிறது.குறிப்பாக, குப்பை வாகனங்கள் வாயிலாக ஏற்றி செல்லப்படும் கழிவுகள், சத்தியவேடு நெடுஞ்சாலையோரம், கீழ்முதலம்பேடு ஏரிக்கரை அருகே குவிக்கப்படுகிறது. ஏரிக்கரை ஓரம் ஒரு சிறு பகுதியில் குவிக்கப்பட்ட குப்பை, அதன் ஆக்கிரமிப்பு பகுதியை அதிகரித்து தற்போது, நெடுஞ்சாலை வரை நீண்டுள்ளது. பரந்து விரிந்து கண்ணுக்கு எட்டும் துாரம் வரை குப்பை குவியல் மட்டுமே அப்பகுதியில் காணப்படுகிறது. குறிப்பிட்ட அளவு குப்பை சேர்ந்ததும் அதை எரித்து வருகின்றனர். இதனால் ஏரி மாசு அடைவதுடன், சுற்றுச்சூழல் கடுமையாக பாதிக்கப்படுவதாக, சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.கவரைப்பேட்டை பகுதியின் மக்கள் தொகை மற்றும் கடைகளுக்கு ஏற்ப, போதிய இடம் ஒதுக்கி, கழிவுகளை முறையாக பிரித்து, நவீன முறையில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.