உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / திருத்தணியில் ஒரே நாளில் 120 திருமணங்கள் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணியில் ஒரே நாளில் 120 திருமணங்கள் மலைப்பாதையில் போக்குவரத்து பாதிப்பு

திருத்தணி:திருத்தணி நகரில் நேற்று, ஒரே நாளில், 120 ஜோடிகளுக்கு திருமணம் நடந்ததால் முருகன் மலைக்கோவிலில் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் பொதுவழியில், நான்கு மணி நேரம் நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.திருத்தணி நகரத்தில், 100க்கும் மேற்பட்ட தனியார் திருமண மண்டபங்கள் உள்ளன. மேலும், முருகன் கோவிலுக்கு சொந்தமான, ஆறு திருமண மண்டபங்கள் மற்றும் மலைக்கோவிலில், ஆர்.சி. மண்டபத்தில் ஒரே நேரத்தில், 10 ஜோடிகளுக்கு திருமணம் செய்யும் வகையில் மணமேடைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.இந்நிலையில் நேற்று தை மாதம் திருமண முகூர்த்த நாள் என்பதால், முருகன் மலைக்கோவிலில், 40 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது. அதே போல, திருத்தணி நகரத்தில் தனியார் திருமண மண்டபங்கள் தொண்டு நிறுவன சத்திரங்கள் என மொத்தம், 80 ஜோடிகளுக்கு திருமணம் நடந்தது.திருமணத்திற்கு வந்த உறவினர்கள்,மணமக்கள் மற்றும் நேற்று வார விடுமுறையான ஞாயிற்றுக்கிழமையில் வழக்கமாக வரும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் என, நேற்று மட்டும் மலைக்கோவிலில் ஒரு லட்சத்திற்கும் மேறபட்ட பக்தர்கள் குவிந்தனர்.இதனால், பொதுவழியில் நான்கு மணி நேரத்திற்கு மேல் நீண்ட வரிசையில் காத்திருந்து மூலவரை தரிசித்தனர். அதே போல, சிறப்பு தரிசன கட்டணத்திலும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் டிக்கெட் பெற்று நீண்ட வரிசையில் இரண்டு மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து, முருகப்பெருமானை வழிபட்டனர்.திருமணத்திற்கு வந்தவர்கள், வழக்கமாக கோவிலுக்கு வந்த பக்தர்கள் என பெரும்பாலானோர் இருசக்கர வாகனம், கார், வேன் மற்றும் பேருந்துகள் வாயிலாக மலைக்கோவிலுக்கு சென்றதால், மலைப்பாதையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.இதனால், மலைப்பாதையில் பக்தர்கள் நடந்து செல்லவும் சிரமப்பட்டனர். இதையடுத்து, திருத்தணி டி.எஸ்.பி. கந்தன் தலைமையில், 50க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும கோவில் ஊழியர்கள் மலைப்பாதையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி போக்குவரத்து நெரிசலை சீரமைத்தும், கார், வேன், பேருந்துகளுக்கு மலைப்பாதையில் தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் நிம்மதியாக நடந்து சென்று மூலவரை தரிசித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை