பூண்டியில் இருந்து 16,500 கன அடி நீர் திறப்பு 2,000 ஏக்கர் நெற்பயிர் நாசம்: விவசாயிகள் கவலை
திருவள்ளூர் மாவட்டத்தில், சில நாட்களாக பெய்து வரும் மழையால், பூண்டியில் இருந்து 16,500 கன அடி நீர் திறக்கப்பட்டு உள்ளது. மேலும், மழையில், 2,000 ஏக்கர் நெற்பயிர் சேதமடைந்துள்ளதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். மேலும், ஆரணி, கொசஸ்தலை ஆறுகளில் தொடர் மழையால் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால், வருவாய் மற்றும் காவல்துறையினர் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், ஆர்வம் மிகுதியால் இளைஞர்கள், ஆபத்தான முறையில் 'செல்பி' எடுத்து வருகின்றனர். வங்க கடலில் நிலைகொண்ட தாழ்வழுத்தம் காரணமாக, திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த, 12ம் தேதி அதிகாலை முதல் இரவு வரை பலத்த மழை பெய்தது. மேலும், ஆந்திர மாநிலம், சித்துார் மாவட்டத்திலும் பலத்த மழை பெய்ததால், அங்கிருந்து கொசஸ்தலை மற்றும் ஆரணி ஆறுகளில் உபரி நீர் திறக்கப்பட்டது. இதனால், இரண்டு ஆறுகளிலும் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.சென்னைக்கு குடிநீர் வழங்கும் பூண்டி நீர்தேக்கத்திற்கு கிருஷ்ணா நீர் வந்து கொண்டு இருக்கிறது. மேலும், ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அணை மற்றும், கேசாவரம், காவேரிப்பாக்கம் ஆகிய பகுதிகளில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு அதிகளவில் தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பூண்டி நீர்தேக்கத்திற்கு நேற்று 16,500 கன அடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.பூண்டி நீர்த்தேக்கத்தின் மொத்த கொள்ளளவான, 3.21 டி.எம்.சி.,யில் தற்போது 3.20 டி.எம்.சி., தண்ணீர் உள்ளதால், இரண்டு நாட்களாக உபரி நீர் திறக்கப்பட்டு வருகிறது. நேற்று, 16 மதகுகளில், 12 மதகுகள் திறக்கப்பட்டு வினாடிக்கு, 16,500 கன அடி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் கொசஸ்தலை ஆற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனிடையே, பூண்டி நீர்த்தேக்கத்தில் தண்ணீர் திறந்ததை பார்க்க வந்தவர்கள், ஆர்வ மிகுதியால் சிலர், 'செல்பி' எடுத்தனர்.பூண்டி நீர்த்தேக்கத்தில் உபரி நீர் திறக்கப்பட்டதால், கொசஸ்தலை ஆற்றில் அதிகரித்து வரும் மழைநீர், தாமரைப்பாக்கம் தடுப்பணையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பூண்டியில் இருந்து எண்ணுார் வரை உள்ள, 29 கிராமங்கள் மற்றும் கொசஸ்தலை ஆற்றின் கரையோரம் தாழ்வான பகுதியில் உள்ளவர்கள், பாதுகாப்பாக இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் நேற்று மாலை பூண்டி நீர்த்தேக்கத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். கலெக்டர் பிரபுசங்கரிடம் நீர்த்தேக்கத்தின் கொள்ளளவு, உயரம், வெளியேற்றப்படும் நீரின் அளவு ஆகியவற்றை கேட்டறிந்த அவர், மக்களுக்கு பாதிப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்குமாறு கூறிவிட்டுச் சென்றார். சிறுபான்மை நலத்துறை அமைச்சர் நாசர், தி.மு.க., - எம்.எல்.ஏ., திருவள்ளூர் ராஜேந்திரன் ஆகியோர் உடன் இருந்தனர்.ஆந்திர மாநிலம், பிச்சாட்டூர் ஏரி நிரம்பியதால், அங்கிருந்து 5,400 கன அடி உபரி நீர் ஆரணி ஆற்றில் வெளியேற்றப்பட்டது. நேற்று, இதன் அளவு 2,000 கன அடியாக குறைக்கப்பட்டது. சுருட்டப்பள்ளி அடுத்த நந்தனம் மலைப் பகுதிகளில் இருந்து வந்த மழைநீரும் ஆரணி ஆற்றில் கலந்ததால், வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. சுருட்டப்பள்ளி அணைக்கட்டு நிரம்பியதால், இங்கிருந்து தமிழகத்தில் உள்ள ஊத்துக்கோட்டை, பேரண்டூர், லட்சிவாக்கம், பாலவாக்கம், முக்கரம்பாக்கம் வரை, 14 ஏரிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்டது. நேற்று காலை, தொம்பரம்பேடு கிராமத்தில் கால்வாய் நிரம்பி தண்ணீர் ஊருக்குள் புகுந்தது. தகவல் அறிந்ததும், நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். பின், சுருட்டப்பள்ளியில் இருந்து ஏரிகளுக்கு திறந்து விடப்பட்ட தண்ணீர் நிறுத்தப்பட்டது.ஆந்திர மாநிலம் கிருஷ்ணாபுரம் அம்மப்பள்ளி அணையில் இருந்து, 2500 கனஅடி உபரி நீர் கொசஸ்தலை மற்றும் நந்தி ஆற்றில் திறக்கப்பட்டது. ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் ஏரி நிரம்பி அதன் உபரிநீர் திறந்து விடப்பட்டதால் நந்தியாற்றில் நேற்று முன்தினம் முதல் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.திருத்தணி வருவாய் கோட்டாட்சியர் தீபா கூறுகையில், 'கொசஸ்தலை, நந்தியாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதால் ஆற்றின் ஓரமுள்ள கிராமங்களில், வருவாய் துறையினர் வாயிலாக மக்கள் பாதுகாப்பாக இருக்க வேண்டும் அறிவுறுத்தி வருகிறோம். தண்ணீரில் மூழ்கிய தரைப்பாலம் பகுதியில், 24 மணி நேரமும் வருவாய் துறை மற்றும் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடு அறிவுறுத்தப்பட்டுள்ளது' என்றார்.திருவள்ளூர் மாவட்டத்தில், பொதுப்பணி மற்றும் ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில், 917 ஏரிகள் உள்ளன. மேலும், சிறிய அளவிலான, குளம், குட்டை என, 3,296 நீர்நிலைகள் உள்ளன.கடந்த இரண்டு வாரத்திற்கு முன் 'பெஞ்சல்' புயல் மற்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பெய்த தொடர் மழை காரணமாக, ஏரி, குளங்களுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பொதுப்பணித் துறை கட்டுப்பாட்டில் உள்ள, 336 ஏரிகளில் 110, ஊரக வளர்ச்சி துறை கட்டுப்பாட்டில் உள்ள, 249 என, மொத்தம் 359 ஏரிகள் நுாறு சதவீதம் நீர் நிரம்பி உள்ளது. இதே போல், குளம், குட்டை என, 3,296ல், 1,627 நீர்நிலைகள் முழு அளவில் நிரம்பி உள்ளது.திருவள்ளூர் ராஜாஜிபுரம், ஜெயா நகர், ஜவஹர் நகர், பூங்கா நகர் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் குளமாக தேங்கியது. திருவள்ளூர், பூண்டி ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில், 2,000 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த நெல் வயலில் மழைநீர் தேங்கியது. காலி மனைகளில் தேங்கிய தண்ணீர், சாலைகளில் பெருக்கெடுத்து ஓடுவதால், பகுதிவாசிகள், கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.ஏரிகளில் நீர் இருப்பு விவரம்: துறை-மொத்த ஏரி-100 சதவீதம்-75-50-25-25க்குள்பொதுப்பணி -336-119-120-63-34-0ஊரக வளர்ச்சி-581-249-197-100-35-0 குளம், குட்டை-3,236-1,627-712-659-272-26
மேலும் வலுவிழந்தது நெடியம் தரைப்பாலம்
பள்ளிப்பட்டு அடுத்த நெடியம் பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் நடுவில் கட்டப்பட்ட தரைப்பாலம் கடந்த 14 ஆண்டுகளில் ஐந்து முறை இடிந்து விழுந்துள்ளது. முறையாக சீரமைக்கப்படாததால் தொடர்ந்து சிதைந்து கிடக்கிறது. இதனால், நெடியத்தில் இருந்து சொரக்காய்பேட்டை அரசு பள்ளிக்கு வரும் மாணவர்களும், பொதட்டூர்பேட்டை, ஆர்.கே.பேட்டையில் இருந்து ஆந்திர மாநிலம், நகரிக்கு செல்லும் நெசவாளர்களும் அவதிப்படுகின்றனர். தற்போது கொசஸ்தலையில் வெள்ளம் பெருக்கெடுத்து பாயும் நிலையில், ஏற்கனவே சிதைந்த நெடியம் தரைப்பாலம், மேலும் மணலில் புதைந்து உருக்குலைந்து வருகிறது. - நமது நிருபர் குழு -