17 ஆக்கிரமிப்பு கடைகள் பொக்லைன் வாயிலாக அகற்றம்
திருவள்ளூர்:திருவள்ளூரில், நெடுஞ்சாலைத் துறையினர், நேற்று காலை, சென்னை - திருப்பதி செல்லும் ஜே.என்.சாலை, ஆவடி பை - பாஸ் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 17 கடைகளை, பொக்லைன் இயந்திரம் வாயிலாக அதிரடியாக இடித்து அகற்றினர்.சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு பகுதிகளில் இருந்து, திருத்தணி, திருப்பதி செல்லும் அனைத்து வாகனங்களும், திருவள்ளூர் ஜே.என்.சாலையை கடந்து சென்று வருகின்றன.அந்த சாலையில், தினமும், ஆயிரக்கணக்கான வாகனங்கள் பயன்படுத்தி வருகின்றன.வீரராகவர் கோவிலுக்கு விசேஷ நாட்களான அமாவாசை, முகூர்த்த தினங்கள், கலெக்டர் அலுவலகம், எஸ்.பி., அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு இடங்களுக்கும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இதனால், திருவள்ளூரில், நாளுக்கு, நாள் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இருசக்கர வாகன ஓட்டிகள் முதல், பல்வேறு தரப்பினரும் நெரிசலில் சிக்கி தவித்து வருகின்றனர். போக்குவரத்து நெரிசலுக்கு காரணமான ஆக்கிரமிப்பை அகற்ற பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்தனர்.இதையடுத்து, நெடுஞ்சாலைத் துறையினர் சாலையோர கடைகளை கடந்த வாரம் அகற்றினர்.இந்நிலையில், நேற்று காலை, சென்னை - திருப்பதி செல்லும் ஜே.என்.சாலை, ஆவடி பை - பாஸ் சாலை ஆகிய இடங்களில் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருந்த 17 கடைகளை பொக்லைன் இயந்திரம் வாயிலாக அதிரடியாக இடித்து அகற்றினர்.ஆக்கிரமிப்பு அகற்றும் பணி காரணமாக, ஜே.என்.சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.