2.50 லட்சம் கால்நடைகளுக்கு தோல் கழலை நோய் தடுப்பூசி
திருவள்ளூர் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 2.50 லட்சம் கால்நடைகளுக்கு, தோல் கழலை நோய் தடுப்பு திட்டத்திற்கான, 'பூஸ்டர்' தடுப்பூசி பணி, வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. திருவள்ளூர் கலெக்டர் பிரதாப் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: கால்நடைகளில் ஏற்படும் தொற்று நோயான தோல் கழலை நோய், வைரஸ் கிருமியால் ஏற்படும் அம்மை நோயை சார்ந்தது. பூச்சி கடி மூலம் பரவும் இந்நோய் தாக்கிய மாடுகளின் தோலின் மேல் கட்டிகள் தோன்றும். எனவே, இந்நோய் தொற்று பரவுவதிலிருந்து தடுக்கும் பொருட்டு, தடுப்பூசி போடுவது அவசியமாக உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள 2.50 லட்சம் கால்நடைகளுக்கு, தோல் கழலை நோய் தடுப்பு திட்டத்திற்கான, 'பூஸ்டர்' தடுப்பூசி பணி, வரும் 30ம் தேதி வரை நடைபெற உள்ளது. எனவே, கால்நடை வளர்ப்போர் பசு, எருமை, எருது மற்றும் நான்கு மாதத்திற்கு மேற்பட்ட இளங்கன்று ஆகியவற்றிற்கு, அருகில் உள்ள கால்நடை மருந்தகங்களில் தடுப்பூசியை செலுத்தி கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.