உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பொன்னேரியில் போலீஸ் பற்றாக்குறை:குற்ற சம்பவங்களை தடுப்பதில் திணறல்

பொன்னேரியில் போலீஸ் பற்றாக்குறை:குற்ற சம்பவங்களை தடுப்பதில் திணறல்

பொன்னேரி:பொன்னேரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில், 80,000 பேர் வசிக்கின்றனர். 70 போலீசார் இருக்க வேண்டிய இங்கு 28 போலீசார் மட்டுமே இருப்பதால், குற்ற சம்பவங்களை தடுக்க முடியாமல் திணறி வருகின்றனர்.திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி காவல் நிலையம், 8 கி.மீ., சுற்றளவில், 44 தாய் கிராமங்கள், 22 சிறு கிராமங்கள், பொன்னேரி நகரம் ஆகியவற்றில், 80,000 க்கும் அதிகமானோர் வசிக்கின்றனர்.பொன்னேரி தாலுகா தலைமையகமாகவும் இருக்கிறது. இங்கு வட்டாட்சியர், சப்-கலெக்டர், மாவட்ட மீன்வளத்துறை, தொழிலாளர் நலத்துறை, குற்றவியல் நீதிமன்றம், கூடுதல் மாவட்ட அமர்வு நீதிமன்றம் உட்பட, ஐந்து நீதிமன்றங்கள் உள்ளன. உள்ளிட்ட பல்வேறு அலுவலகங்கள் உள்ளன.பல்வேறு பிரச்னைகளுக்காக ஏதாவது ஒரு அமைப்பின் சார்பில் இங்கு தினமும் நடைபெறும் ஆர்ப்பாட்டம், போராட்டங்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அவசியமாகிறது.தவிர காட்டன் சூதாட்டம், ஆன்லைன் லாட்டரி விற்பனை, கஞ்சா விற்பனை, அதிகாலை மதுவிற்பனை உள்ளிட்ட சட்டவிரோத நடவடிக்கைகளை கண்காணித்தல், திருட்டு, கொள்ளை சம்பவங்களை தடுக்க இரவு நேர ரோந்துபணி மேற்கொள்ளுதல் என பல்வேறு பணிகள் உள்ளன.இவற்றை எல்லாம் கண்காணித்து குற்ற சம்பவங்களை தடுக்க, பொன்னேரி காவல் நிலையத்தில், 70 போலீசார் பணியில் இருக்க வேண்டும். ஆனால் இங்கு இருப்பது ஒரு இன்ஸ்பெக்டர், 3 சப்- இன்ஸ்பெக்டர்கள், 4 சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள், 5 தலைமை காவலர்கள் 15 காவலர்கள் என, 28 பேர் மட்டுமே உள்ளனர். அவர்களும் நீதிமன்ற பணி, பந்தோபஸ்து பணி என இருக்கின்றனர். தற்காலிகமாக, மாற்று காவல் நிலையங்களில் இருந்து அன்றாடம், சில போலீசார் பொன்னேரியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர். திருவள்ளூர் காவல் மாவட்டத்தின் கீழ் செயல்பட்டு வந்த இந்த காவல் நிலையம் கடந்த ஆண்டு, பிப்ரவரியில் ஆவடி கமிஷனரகத்துடன் இணைக்கப்பட்டது.இதனால் கூடுதல் போலீசார் நியமிக்கப்பட்டு, பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் குற்ற சம்பவங்களை கண்காணிப்பர் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது.சட்டவிரோத செயல்கள் தடையின்றி நடைபெறுகிறது. திருட்டு, வழிப்பறி சம்பவங்கள் நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது.கடந்த, ஐந்து மாதங்களில் பைக் திருட்டு, விவசாய மோட்டார் ஒயர்கள் திருட்டு, உண்டியல் திருட்டு என, 50க்கும் மேற்பட்ட குற்ற சம்பவங்கள் நடைபெற்று, அவற்றின் மீது நடவடிக்கை இன்றி கிடக்கிறது.குற்ற சம்பவங்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க, குற்றப்பிரிவு குழு எதுவும் இல்லை. சட்டம் - ஒழுங்கு, குற்றம் என தனித்தனி இன்ஸ்பெக்டர்கள் இருக்க வேண்டும். இங்கு இரு பிரிவுகளையும் ஒருவரே கவனிக்கும் நிலை இருக்கிறது.போலீஸ் பற்றாக்குறையால் பொன்னேரி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களின் பாதுகாப்பு கேள்விக்குறியாகி வருகிறது.

மீஞ்சூர் காவல் நிலையத்தில் 90 பேர்

இது குறித்து பொன்னேரியை சேர்ந்த சமூக ஆர்வலர் எப். முகம்மது ஷகில் கூறியதாவது: சென்னை சிட்டி போலீசுடன் காவல்நிலையம் இணைவதால், கூடுதல் பாதுகாப்பு கிடைக்கும் என்று நம்பியிருந்த நிலையில் ஏமாற்றமே மிஞ்சி உள்ளது. கண்துடைப்பிற்காக காவல் நிலையத்தை ஆவடி கமிஷனரகத்துடன் இணைத்துவிட்டு, உரிய போலீசார் நியமிக்கப்படாமல் இருக்கின்றனர்.கிராமங்களில் கஞ்சா புழக்கம் அதிகரித்து உள்ளது. அதற்கு அடிமையானவர்கள் சிறு சிறு திருட்டுக்களில் ஈடுபடுகின்றனர். கிராமங்களுக்கு போலீசார் செல்லாத நிலையில், அவர்களை கண்காணிக்க முடியாத நிலை இருக்கிறது. போதிய போலீசாரை பணியமர்த்தி, குற்றசம்பவங்களை முன்கூட்டியே தடுக்கவும், பொதுமக்களுக்கு போதிய பாதுகாப்பு வழங்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !