உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருவள்ளூர் / பழையனுாரில் துணை மின் நிலைய பணி கிடப்பில் 40 கிராம மக்கள் குறைந்த மின்னழுத்ததால் தவிப்பு

பழையனுாரில் துணை மின் நிலைய பணி கிடப்பில் 40 கிராம மக்கள் குறைந்த மின்னழுத்ததால் தவிப்பு

திருவாலங்காடு:திருவாலங்காடு அடுத்த பழையனூரில் 14.73 கோடியில் அமைய உள்ள துணை மின் நிலைய பணி கிடப்பில் போட்டப்பட்டுள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். 40க்கும் மேற்பட்ட கிராம மக்கள் குறைந்த மின்னழுத்தத்தால் தவிப்பதால் விரைந்து துணை மின் நிலையம் அமைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.திருவள்ளூர் மாவட்டம், திருவாலங்காடு ஒன்றியத்தில், 42 ஊராட்சிகள் உள்ளன. திருவாலங்காடு சுற்றுவட்டாரத்தில் அமைந்துள்ள 30 கிராமங்களுக்கு கடம்பத்துார் மற்றும் மோசூர் துணைமின்நிலையம் வாயிலாக மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி மணவூர், தொழுதாவூர், குப்பம் கண்டிகை உட்பட 24 கிராமங்களுக்கு கடம்பத்துாரில் இருந்தும், சின்னம்மாபேட்டை வியாசபுரம், அரிசந்திராபுரம் உள்ளிட்ட 16 கிராமங்களுக்கு மோசூர் துணைமின்நிலையத்தில் இருந்தும் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது.அதன்படி 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள், 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் வணிக வளாகங்களுக்கு மின்சாரம் வினியோகிக்கப்படுகிறது. இந்நிலையில் மேற்கண்ட இரண்டு துணைமின்நிலையத்தில் இருந்து, 15 கி.மீ., துாரத்தில் உள்ள கிராமங்களுக்கு மின்சாரம் கிடைப்பதால், 140 ----- 190 வோல்ட் மின்சாரம் மட்டுமே கிடைக்கிறது. இதனால் கோடைக்காலத்தில் பல வீடுகளில் மின்விசிறி கூட சரியாக இயங்காத சூழல் இருந்து வருகிறது.கடந்த, 20 ஆண்டுகளாக இப்பகுதியில் மின்சாரம் தட்டுப்பாடு பிரச்னை உள்ளதால் திருவாலங்காடில் துணைமின்நிலையம் அமைக்க வேண்டும் என பகுதிவாசிகள் தொடர் கோரிக்கை வைத்து வந்தனர்.இதையடுத்து, 2020ம் ஆண்டு திருவாலங்காடு மின்துறை அதிகாரியால் மின்துறை சேர்மனுக்கு முன்மொழிவு அளிக்கப்பட்டது. 2021ம் ஆண்டு மின்துறை ஒப்புதல் வழங்கியது.அதன்படி 14 கோடியே 73 லட்சத்து 63 ஆயிரம் ரூபாய் மதிப்பில், 1.64 ஏக்கர் பரப்பளவில் துணைமின்நிலையம் அமைக்க பழையனூரில் இடம் தேர்வு செய்யப்பட்டது.இந்த துணைமின்நிலையம் 20 எம்.வி.ஏ., திறன் உடையது. எனவே 50 கிராமங்களுக்கு மின்சாரம் முழு அளவில் சப்ளை கிடைக்கும் எனவும், இதில் 200 மின்மாற்றிகள் வரை அமைத்து முழு மின்சாரம் பெறப்படும் என தெரிவிக்கப்பட்டது.இந்நிலையில் துணைமின்நிலையம் அமைக்கும் பணி இரண்டு ஆண்டுகளாக கிடப்பில் போடப்பட்டு உள்ளதால் மக்கள் அதிருப்தி அடைந்தனர்.இதுகுறித்து திருவாலங்காடை சேர்ந்த ஆர்.குமாரலிங்கம் கூறியதாவது:எங்கள் பகுதிக்கு மின்சாரம் 15 கி.மீ., துாரத்தில் இருந்து கொண்டு வரப்படுவதால், மழைக்காலத்தில் அடிக்கடி மின்சாரம் துண்டிக்கப்படும். இரண்டு நாட்கள் மின்சாரம் துண்டிக்கப்பட்ட காலமும் உண்டு. இரண்டாண்டுக்கு முன் துணைமின்நிலையம் அமைக்க ஒப்புதல் வழங்கியும் காலம் தாழ்த்துவது ஏன் என தெரியவில்லை. அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதுகுறித்து திருமழிசை கோட்ட மின்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'துணை மின் நிலையம் அமைய உள்ள இடத்தில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். ஓரிரு மாதங்களில் டெண்டர் விடப்பட்டு பணி துவங்க உள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை