பள்ளிக்கரணையில் சீசன் முடிந்ததால் சொந்த ஊருக்கு புறப்பட்ட 52 வகை பறவைகள்
சென்னை, பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் சீசன் முடிவதால், 52 வகையான வெளிநாட்டு பறவைகள், விடைபெற துவங்கியுள்ளன.சென்னையில், வேளச்சேரி முதல் பெரும்பாக்கம் வரை பரவியுள்ள பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் இதுவரை, 202 வகை பறவைகள் வந்து செல்வது, கணக்கெடுப்பில் உறுதியாகி உள்ளது. இதில், 84 வகை பறவைகள், பல்வேறு நாடுகளில் இருந்து வந்து செல்கின்றன.ஆண்டுதோறும் செப்., - அக் மாதங்களில், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு பறவைகள் வரும். இவை, ஏப்., மே மாதங்களில் ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளுக்கு திரும்புவது வழக்கம்.இவ்வாறு சீசன் முடிந்து வரும் பறவைகளை வரவேற்கும் வகையில், ஐரோப்பிய நாடுகளில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்படும். இதற்காக, மே மாதம் இரண்டாவது சனிக்கிழமை, உலக வலசை பறவைகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு, 2024 ஆக., இறுதி வாரத்திலேயே பறவைகள் வரத்துவங்கின. இருப்பினும், செப்., முதல், மார்ச் வரையிலான காலத்தில், மாதம் தோறும் இங்கு, வனத்துறையுடன் இணைந்து, 'தி நேச்சர் டிரஸ்ட்' அமைப்பால் பறவைகள் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட்டது. இதுகுறித்து, தி நேச்சர் டிரஸ்ட் அமைப்பின் நிறுவனர் திருநாரணன் கூறியதாவது:பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில், 84 வகை பறவைகளின் வருகை ஆவணப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த சீசனில், 52 வகை பறவைகள் வந்தது கணக்கெடுப்பில் தெரியவந்துள்ளது.இதில், 26 வகை கரையோர பறவைகள், 14 வகை தரை வாழ் பறவைகள், ஆறு வகை காட்டு வாத்துகள், ஆறு வகை வேட்டையாடி பறவைகள் வந்துள்ளன. குறிப்பாக கொசு உள்ளான் வகையில், 25,000க்கும் மேற்பட்ட பறவைகள் வந்தன.கருவால் மூக்கன், பேதை உள்ளான், எலுமிச்சை நிற வாலாட்டி, நீலசிறகு வாத்து, கிளுவை போன்ற பறவைகள் அதிக எண்ணிக்கையில் வந்தன.இது மட்டுமல்லாது, மிக அரிதானதாக கருதப்படும், நீளக்கால் கொசு உள்ளான், தத்துக்கிளி கதிர் குருவி, மெல்லிய அலகு கடற்காக்கை, கல்திருப்பி உள்ளான் பறவைகள் புதிய வரவாக பதிவாகி உள்ளன. நகர்ப்புற வளர்ச்சி சார்ந்த பல்வேறு பிரச்னைகள் இருந்தபோதும், பள்ளிக்கரணை சதுப்பு நிலத்துக்கு வரும் பறவைகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இப்பகுதியை பாதுகாப்பதற்கான அவசியத்தை உணர்த்துவதாக இது அமைந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளிக்கரணை சதுப்பு நிலைத்தில்,
2024 செப்., முதல், 2025 மார்ச் வரைவலசை வந்த பறவைகளின்அதிகபட்ச எண்ணிக்கை விபரம்பறவைகள் எண்ணிக்கைகரையோர பறவைகள்கொசு உள்ளான் 25,235பேதை ௨ள்ளான் 3,610பொரி மண்கொத்தி 2,200கருவால் மூக்கான் 2,197சதுப்பு மண்கொத்தி 941பொன்னிற உப்புக்கொத்தி 227மீசை ஆலா 715வெண் இறக்கை ஆலா 386சாம்பல் தலை ஆள்காட்டி 203கோணமூக்கு உள்ளான் 91பெரிய பூநாரை 35 தரைவாழ் பறவைகள்மஞ்சள் வாலாட்டி 1,882எலுமிச்சை நிற வாலாட்டி 1,578தகைவிலான் 966இளஞ்சிவப்பு நாகணவாய் 809----காட்டு வாத்துக்கள்நீலச்சிறகு வாத்து 4,085ஊசிவால் வாத்து 2,465தட்டை வாயன் 1,812நாமத்தலை வாத்து 460கிளுவை 203 - நமது நிருபர் -