திருத்தணியில் சாலை விதிகளை மீறியதால் 9 மாதத்தில் 293 விபத்துகளில் 91 பேர் பலி
திருத்தணி, திருத்தணி கோட்டத்தில், சாலை விதிகளை மதிக்காத வாகன ஓட்டிகளால், 293 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 91 பேர் உயிரிழந்துள்ளனர். திருத்தணி வருவாய் கோட்டத் தில் திருத்தணி, ஆர்.கே.பேட்டை மற்றும் பள்ளிப்பட்டு தாலுகாவில், ஒரு நகராட்சி, இரண்டு பேரூராட்சிகள், நான்கு ஒன்றியங்கள் உள்ளன. இங்கு, இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசிக்கின்றனர். திருத்தணியில் இருந்து திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, சென்னை, திருப்பதி, வேலுார், ராணிப்பேட்டை , சித்துார் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு அதிகளவில் வாகனங்கள் சென்று வருகின்றன. இதுதவிர, திருத்தணியில் முருகனின் ஆறுபடை வீடுகளில் ஒன்றான ஐந்தாம் படை வீடான சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளதால், தமிழகம் உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து, தினமும் 1,000க்கும் மேற்பட்ட வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் , வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை மதிக்காமல் அலட்சியம் காட்டி வருவதால், கடந்த ஜனவரி - செப்டம்பர் வரை, மொத்தம் 293 விபத்துகள் நடந்துள்ளன. இதில், 91 பேர் பலத்த காயமடைந்து உயிரிழந்துள்ளனர். மேலும், 750க்கும் மேற்பட்டோர் படுகாய மடைந்து, மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதற்கு காரணம், வாகனங்களை அதிவேகமாக இயக்குதல், சாலை விதிகளை மதிக்காமல் இயக்குவது மற்றும் இருசக்கர வாகன ஓட்டிகள் ஹெல்மேட் அணியாமல் வாகனங்களை ஓட்டுவதால், விபத்துகள் நடந்துள்ளதாக மோட்டார் வாகன போக்குவரத்து ஆய்வாளர் மற்றும் போலீசார் தரப்பில் கூறப்படுகிறது. இதுகுறித்து திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜசேகரன் கூறியதாவது: திரு த்தணி வருவாய் கோட்டத்தில், 'பர்மிட்' இல்லாமல் வாகனங்கள் இயக்குவது, ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இயக்குவது மற்றும் அதிவேகமாக வாகனங்கள் இயக்குவது குறித்து, அடிக்கடி சோதனை செய்து, வாகனங்களை பறிமுதல் செய்து வருகிறோம். மேலும், விதிமீ றும் வாகனங்களின் உரிமையாளர்களிடம் இருந்து அபராதமும் வசூலித்து, விதிகளை கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தி வருகி றோம். இதுதவிர பள்ளி, கல்லுாரி மாணவர்கள் மூலம் விழிப்புணர்வு பேரணியும் நடத்தியுள்ளோம். குறிப் பாக, இருசக்கர வாகனங்கள் இயக்குபவர்கள், ஹெல்மெட் அணிந்து வாகனங்களை இயக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
ஒன்பது மாதங்களில் வசூலித்த அபராதம்
விதிமீறிய வாகன ஓட்டிகளிடம் இருந்து, 28,39,400 ரூபாயும், வாகனங்கள் புதுப்பித்தல் மூலம், 78,26,400 ரூபாயும், வரி வசூல் மூலம், 69,33,00 ரூபாயும் வசூலிக்கப்பட்டுள்ளன. மேலும், அனுமதியின்றியும், பதிவு இல்லாமல் வாகனங்கள் இயங்கியதாகவும், 115 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.